வங்கதேச ஜமாத் கட்சி முக்கியத் தலைவரின் மரண தண்டனை நிறைவேற்றம்

தினமணி  தினமணி
வங்கதேச ஜமாத் கட்சி முக்கியத் தலைவரின் மரண தண்டனை நிறைவேற்றம்

வங்கதேசத்தில் ஜமாத்-ஏ-இஸ்லாமி கட்சியின் முக்கியத் தலைவர் மீர் காசிம் அலிக்கு, போர்க்குற்றம் தொடர்பான வழக்கில் விதிக்கப்பட்ட மரண தண்டனை சனிக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்பாக அந்த நாட்டின் சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சர் அனீசுல் ஹக் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது:

சுதந்திரப் போரின்போது 1971-இல் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பான வழக்கு விசாரணையின் முடிவில் மீர் காசிம் அலி குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது. அவரது மேல்முறையீடுகள் நிராகரிக்கப்பட்ட நிலையில், அவரது தூக்கு தண்டனை சனிக்கிழமை இரவு உள்ளூர் நேரப்படி 10.35 மணிக்கு நிறைவேற்றப்பட்டது என்றார்.

தலைநகர் டாக்காவுக்கு சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ள காசிம்பூர் சிறையில் மீர் காசிம் அலி தூக்கிலிடப்பட்டார்.

உச்ச நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு கடந்த செவ்வாய்க்கிழமை நிராகரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்நாட்டு அதிபரிடம் கருணை மனு அளிக்க இறுதி வாய்ப்பு இருந்தது. ஆனால் கருணை மனு ஏற்கப்பட வேண்டுமானால், குற்றம் செய்ததாக ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கும் என்பதால் அவர் கருணை மனு அளிக்க மறுத்துவிட்டார்.

1971-ஆம் ஆண்டு வங்கதேச விடுதலைப் போரின்போது, சிட்டகாங் பகுதியில் செயல்பட்டு வந்த ஆயுதக் கும்பலின் தளபதியாக இருந்தவர் மீர் காசிம் அலி. சுதந்திரம் அடைந்து வங்கதேசம் தனி நாடான பிறகு, ஊடகம், கப்பல் துறை, கட்டடத் துறையில் ஈடுபட்டுப் பெரும் தொழிலதிபரானார். இன்று பாகிஸ்தான் என அறியப்படும் மேற்குப் பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைப்பாடு கொண்ட அந்த ஆயுதக் குழு, விடுதலைப் போராட்ட வீரர்களைக் கொன்று குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. சுதந்திரப் போராட்ட வீரர் ஒருவரைக் கடத்திச் சென்று கொன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அது தொடர்பான வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

போர்க்குற்றங்களுக்காக, இதற்கு முன்னரும் ஜமாத்-ஏ-இஸ்லாமி கட்சியைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் தூக்கிலிடப்பட்டனர். கடந்த 3 ஆண்டுகளில் 5 முக்கிய ஜமாத் கட்சித் தலைவர்களின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவர்களுக்கு மரண தண்டனை அறிவிக்கப்பட்டபோதும், தண்டனை நிறைவேற்றத்தின்போதும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வன்முறை - கலவரம் வெடித்தது. தொழிலதிபராகவும், தொண்டுபுரிபவராகவும் பரவலாக அறியப்பட்ட மீர் காசிம் அலியின் மரண தண்டனை நிறைவேற்றத்தையொட்டி, நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வங்கதேச விடுதலைப் போராட்டத்தின்போது, ஜமாத்-ஏ-இலாமி கட்சி பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது. வங்கதேச சுதந்திரப் போராட்டதில் அந்தக் கட்சியினர் ஈடுபடவில்லை. விடுதலைப் போரில் பங்கு பெற்றவர்களுக்கு எதிராகப் பல கொடுமைகளை அந்தக் கட்சியினர் இழைத்ததாகப் பல்வேறு விசாரணை மூலம் நிரூபணமானது.

மூலக்கதை