என்எஸ்ஜியில் இந்தியா உறுப்பினராக தொடர்ந்து ஆதரவு

தினமணி  தினமணி
என்எஸ்ஜியில் இந்தியா உறுப்பினராக தொடர்ந்து ஆதரவு

அணுசக்தி விநியோக நாடுகளின் கூட்டமைப்பில் (என்எஸ்ஜி) இந்தியா உறுப்பினராக சேர்வதற்கு ஆஸ்திரேலியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் அந்நாட்டு பிரதமர் மால்கம் டர்ன்புல் உறுதியளித்தார்.

சீனாவின் ஹாங்சு நகரில் நடைபெறும் ஜி-20 நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி சென்றுள்ளார். அங்கு அவர், ஆஸ்திரேலிய பிரதமர் டர்ன்புல்லை ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது தலைவர்கள் இருவரும் பாதுகாப்பு, ஆயுத தளவாடம் ஆகிய துறைகளில் இரு நாடுகளும் ஒத்துழைத்து செயல்படுவது குறித்து ஆலோசனை நடத்தினர். அண்மையில் இரு நாடுகளும் சேர்ந்து நடத்திய கடற்படை ஒத்திகைகளை நினைவு கூர்ந்த இருவரும், தொடர்ந்து அத்தகைய ஒத்திகையை நடத்துவதெனவும் தீர்மானித்தனர்.

மேலும், பயங்கரவாத விவகாரம் குறித்தும் பிரதமர் மோடியும், ஆஸ்திரேலியப் பிரதமரும் பேசினர். அப்போது ஆஸ்திரேலிய பிரதமரிடம் மோடி கூறியதாவது:

பயங்கரவாத சவாலை எதிர்கொள்ள உலகில் உள்ள அனைத்து ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரள வேண்டும். இந்தியாவின் அண்டை நாடு, பயங்கரவாதத்தின் அழிவு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளது. ரஷியா, சீனா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளும் தெற்காசிய பிராந்தியத்தில் உருவாகும் பயங்கரவாதத்தை எதிர்கொண்டு வருகின்றன. ஆதலால், பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளிப்போர், ஆயுத உதவி செய்வோரை அடையாளம் கண்டறிவது மிகவும் முக்கியமாகும். இல்லையெனில், உலக நாடுகள் வரும் வாரங்கள், மாதங்களில் மிகப்பெரிய சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் (பாகிஸ்தானில் லஷ்கர்-ஏ-தொய்பா, தலிபான், ஹக்கானி பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவு அளிக்கப்படுவதை மறைமுகமாக குறிப்பிட்டார்).

ஆஸ்திரேலிய ஓய்வூதிய திட்ட நிதியை இந்தியாவில் முதலீடு செய்வதற்கு நீங்கள் (டர்ன்புல்) ஆதரவு அளிக்க வேண்டும். மாசில்லா நிலக்கரி தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு அளிக்கவும் ஆதரவு தர வேண்டும் என்றார் பிரதமர் மோடி.

அப்போது ஆஸ்திரேலிய பிரதமர் டர்ன்புல் கூறுகையில், "என்எஸ்ஜியில் இந்தியா உறுப்பினராக சேர்க்கப்படுவதற்கு ஆஸ்திரேலியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும்' என்றார்.

என்எஸ்ஜியில் உறுப்பினராக சேருவதற்கு விருப்பம் தெரிவித்து இந்தியா விண்ணப்பித்தது. இதுதொடர்பாக தென்கொரியாவின் சியோல் நகரில் நடைபெற்ற என்எஸ்ஜி கூட்டத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது சீனாவும், சில நாடுகளும் அணுசக்தி தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடுகளை என்எஸ்ஜியில் உறுப்பினராக சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் இந்தியாவின் முயற்சி தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை