இந்தியாவும், சீனாவும் பரஸ்பர விருப்பங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்: மோடி

தினமணி  தினமணி
இந்தியாவும், சீனாவும் பரஸ்பர விருப்பங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்: மோடி

இந்தியாவும், சீனாவும் பரஸ்பரம் பிறரது விருப்பங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

ஐ.நா. சபை மூலம் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத தலைவருக்கு தடை விதிக்கும் இந்தியாவின் முயற்சிக்கு சீனா தடை போட்டது. இதேபோல், அணுசக்தி விநியோக நாடுகளின் கூட்டமைப்பில் இந்தியாவை உறுப்பினராக சேர்க்க விடாமலும் சீனா தடுத்தது. இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக தனது நாட்டுக்கு வளர்ச்சித் திட்டங்களை சீனா செயல்படுத்தி வருகிறது.

இதுபோன்ற சூழ்நிலையில், சீனாவின் ஹாங்ஸý நகரில் நடைபெறும் ஜி-20 நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு பிரதமர் மோடி சென்றுள்ளார். அங்கு அவர், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்களுக்கு நீடித்தது.

அப்போது சீன அதிபரிடம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக சீனாவின் ஷின்சியாங் பகுதிக்கு செயல்படுத்தப்பட்டு வரும் சீனா-பாகிஸ்தான் பொருளாதார முனையம் திட்டத்துக்கு இந்தியாவின் கவலையை மோடி தெரிவித்தார். தெற்காசியப் பிராந்தியத்தில் பயங்கரவாதம் வளர்த்து விடப்படுவது குறித்தும் மோடி விளக்கினார். பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையை அரசியல் ரீதியிலான கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது எனவும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

இந்தியா-சீனா இடையே நல்லுறவு நிலவுவது இருநாடுகளுக்கு மட்டுமன்றி, இந்த பிராந்தியத்துக்கும், உலகத்துக்கும் நன்மை பயக்கும் என்றும் மோடி சுட்டிக்காட்டினார். இந்தியா, சீனா இடையே நிலையான நீடித்த இருதரப்பு உறவுக்கு, பரஸ்பரம் இரு நாடுகளும் பிறரது விருப்பங்கள், கவலைகள், பிராந்திய நலன்களுக்கு மரியாதை அளிப்பது அவசியம் என்றும் மோடி வலியுறுத்தினார். இரு நாடுகளுக்கும் இடையே எதிர்மறையான புரிதல் வளர்ந்து வருவதை தடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் மோடி கேட்டுக் கொண்டார்.

இந்த நூற்றாண்டு, ஆசியாவின் நூற்றாண்டு என்று கூறப்படுவதை ஊர்ஜிதம் செய்வதற்கு ஆசியக் கண்டத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் மோடி வலியுறுத்தினார்.

கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகரில் சீனத் தூதரகத்தில் அண்மையில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலுக்கும் மோடி கண்டனம் தெரிவித்தார். பயங்கரவாதத்தால் ஏற்படும் பாதிப்புக்கு இந்த சம்பவம் மற்றொரு உதாரணம் என்றும் மோடி கூறினார்.

இதையடுத்து, சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறியபோது, நீண்டகால நடவடிக்கைகள் மூலம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்படுத்தப்பட்ட உறவை தொடர விரும்புவதாக கூறினார். மேலும், இந்தியாவுடனான இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கும் அவர் விருப்பம் தெரிவித்தார்.

இந்தியா வரும்படி சீன அதிபருக்கு அழைப்பு: கோவாவில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் பிரிக்ஸ் அமைப்பின் 8-ஆவது உச்சி மாநாட்டுக்கு வரும்படி, சீன அதிபருக்கு முறைப்படி பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை சீன அதிபரும் ஏற்றுக் கொண்டார்.

மேற்கண்ட தகவலை இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் செய்தியாளர்களிடம் பேசியபோது தெரிவித்தார். அப்போது அவரிடம், என்எஸ்ஜியில் இந்தியாவை சேர்க்க விடாமல் சீனா தடை போட்டது குறித்து பிரதமர் மோடி பேசினாரா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், "தலைவர்களுக்கு இடையே பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையின் ஒவ்வொரு விவரத்தையும் உங்களிடம் தெரிவிக்க முடியாது' என்றார்.

மூலக்கதை