பலூசிஸ்தான் பிரச்னைக்கு இந்தியாவே காரணம்

தினமணி  தினமணி
பலூசிஸ்தான் பிரச்னைக்கு இந்தியாவே காரணம்

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் பகுதியில் நிலவும் பதற்றமான நிலைக்கு இந்தியாவே காரணம் என்று அந்நாட்டின் முன்னாள் அமைச்சர் குற்றம்சாட்டினார்.

பாகிஸ்தான் முன்னாள் உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக் இது குறித்து செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள பிரிவினைவாதிகளுக்கு இந்தியா உதவி வருகிறது. முன்பு கிழக்கு பாகிஸ்தானாக இருந்த (இப்போது வங்கதேசம்) பகுதியில் முக்தி வாஹினி பிரிவினை இயக்கத்துக்கு எவ்வாறு உதவியதோ, அதே போல இப்போது பலூசிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு இந்தியா உதவுகிறது. இதற்கு ஆப்கானிஸ்தானின் ஒத்துழைப்பும், மேற்கு நாடுகளின் துணையும் உள்ளது.

பலூசிஸ்தானில் நிலவும் பதற்றமான நிலைக்கு இந்தியாவே முற்றிலும் காரணம். இதில் ஒளிவு மறைவு இல்லை. இந்தியாவின் நடவடிக்கைகள் குறித்து, முந்தைய ஆசிப் அலி ஜர்தாரி அரசு இந்திய அரசிடம் கடும் ஆட்சேபத்தை தெரிவித்தது.

ஆனால் 2013-இல் எங்களது ஆட்சி முடிவுக்கு வந்ததையடுத்து, இந்த விவகாரத்தில் தொடர் நடவடிக்கை எடுக்க முடியாமல் போனது. பாகிஸ்தான் நாடாளுமன்ற மேலவையில் இது தொடர்பாக நீண்ட விளக்கத்தை அளித்துள்ளேன். பலூசிஸ்தான் பிரிவினைவாதத் தலைவரான பிரஹம்தக் புக்திக்கு இந்தியா அளித்து வரும் உதவிகள் குறித்த விவரங்களை அவையில் தாக்கல் செய்துள்ளேன்.

பாகிஸ்தானுக்கு எதிராகப் பின்னப்படும் சதி வலையை பிரதமர் நவாஸ் ஷெரீஃப் கருத்தில் கொண்டு, அதன் பின்னால் செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த ஆண்டு செப்டம்பரிலும், இவ்வாண்டு ஜூனிலும் அமெரிக்கா-இந்தியா கூட்டு அறிக்கைகள் வெளியிட்டது, பாகிஸ்தானுக்கு நெருக்கடி தருவதற்காகத்தான் என்றார் அவர்.

மூலக்கதை