உஸ்பெகிஸ்தான் அதிபர் மரணம்

தினமணி  தினமணி
உஸ்பெகிஸ்தான் அதிபர் மரணம்

உஸ்பெகிஸ்தான் அதிபர் இஸ்லாம் கரீமோவ் (78) வெள்ளிக்கிழமை இரவு காலமானார்.

தலைநகர் தாஷ்கண்டில் அவர் காலமான செய்தியை அரசுத் தொலைக்காட்சி இரவு அறிவித்தது. கடந்த வார இறுதியில் திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் நினைவிழந்தார். அதிலிருந்து மீள்வதற்கு முன்னரே அவர் வெள்ளிக்கிழமை காலமானார் என்று தெரிவிக்கப்பட்டது.

அவரது சொந்த ஊரான சமர்கண்டில் இறுதிச் சடங்கு சனிக்கிழமை நடைபெற்றது. அதிபர் இஸ்லாம் கரீமோவ் மரணத்தைத் தொடர்ந்து நாட்டில் 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

"உறுதி மிக்கத் தலைவர்' என பாரட்டப்பட்ட கரீமோவ், சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக இருந்த உஸ்பெகிஸ்தான் சோசலிச குடியரசின் தலைவராக, அன்றைய சோவியத் அதிபர் கோர்பசேவால் கடந்த 1989-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். சோவியத் யூனியன் பிரிந்த பிறகு, உஸ்பெகிஸ்தான் அதிபராக 1991-ஆம் ஆண்டு பதவியேற்றுத் தொடர்ந்து பதவி வகித்த கரீமோவ், சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்தார்.

அவருடைய விசுவாசியான பிரதமர் ஷெளகத் மிர்ஸியோயேவ் அடுத்த அதிபராவார் என்று கருதப்படுகிறது. முறையான அதிபர் தேர்தல் நடைபெறும் வரை, அந்நாட்டின் அரசியல் சாசனப்படி நாடாளுமன்ற மேலவைத் தலைவர் நிகமதுல்லா யுல்தஷேவ் தாற்காலிக அதிபராகப் பொறுப்பேற்றார்.

மூலக்கதை