பிலிப்பின்ஸ் குண்டு வெடிப்பில் 14 பேர் பலி

தினமணி  தினமணி
பிலிப்பின்ஸ் குண்டு வெடிப்பில் 14 பேர் பலி

பிலிப்பின்ஸ் அதிபரின் சொந்த ஊரான டாவோ நகரில் வெள்ளிக்கிழமை இரவு நிகழ்த்தப்பட்ட சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பில் 14 பேர் உயிரிழந்தனர்.

டாவோ நகரின் மையப் பகுதியில் உள்ள சந்தையில் உள்ளூர் நேரப்படி இரவு 11 மணிக்கு சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இதில் 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 67 பேர் காயமடைந்தனர். இவர்களில் 16 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

குண்டு வெடிப்பு நிகழ்ந்தபோது, அதிபர் ரோட்ரிகோ டுடேர்தே அந்த நகரில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்ட இடத்துக்கு அருகில் அவர் இருக்கவில்லை.

இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக அந்நாட்டின் பாதுகாப்புத் துறைச் செயலர் டெல்ஃபின் லொரன்ஸானா கூறியதாவது: இஸ்லாமிய தேச பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய அபு சய்யஃப் குழு இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியதாகத் தெரிகிறது. பயங்கரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க ராணுவத்துக்கு முழு சுதந்திரம் அளிப்பதாக அரசு கடந்த வாரம் அறிவித்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பொது இடத்தில் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்தி அப்பாவி மக்களின் உயிர் பலியிடப்பட்டுள்ளது என்றார்.

தற்போதைய அதிபர் டுடேர்தே அந்தப் பதவிக்குத் தேர்தெடுக்கப்படுவதற்கு முன்னர், டாவோ நகர மேயராக ஏறத்தாழ 20 ஆண்டுகள் பொறுப்பு வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அவரது மகள் சாரா டுடேர்தே டாவா நகர மேயராக உள்ளார்.

பயங்கரவாதம், போதை மருந்து கும்பல்கள், ஊழல் ஆகியவற்றைக் கடுமையான நடவடிக்கைகள் மூலம் நாட்டைவிட்டு ஒழிப்பதாக வாக்குறுதி அளித்து தேர்தலில் போட்டியிட்ட டுடேர்தே மாபெரும் வெற்றி பெற்றார். பல்வேறு கம்யூனிஸ்ட் பிரிவினர்களுடனும் ஆயுதம் ஏந்திய ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களைக் கொண்ட இரு முஸ்லிம் குழுக்களோடும் பேச்சுவார்த்தை நடத்தி, நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதில் ஓரளவு அவர் வெற்றி பெற்றார் என்று கூறப்படுகிறது. ஆனால், இஸ்லாமிய தேச பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய அபு சய்யஃப் குழுவுடன் அமைதி உடன்பாடு ஏற்படுத்த முடியவில்லை. இந்த நிலையில், டுடேர்தே கடந்த பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்த டாவோ நகரில் பயங்கரவாதத் தாக்குதலை அந்தக் குழுவினர் நிகழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

பிலிப்பின்ஸின் தென் பகுதியிலுள்ள மின்டானோவில் பிரிவினை கோரும் இஸ்லாமிய தீவிரவாதிகள் அவ்வப்போது பொது இடங்களில் தாக்குதல்கள் நிகழ்த்தி வருகின்றனர். பிரிவினை கோரி நடக்கும் சண்டையில் 1.2 லட்சம் பேருக்கு மேல் உயிரிழந்தனர்.

அமெரிக்கா கண்டனம்

வாஷிங்டன், செப். 3: பிலிப்பின்ஸில் வெள்ளிக்கிழமை இரவு நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்புக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது.

இது தொடர்பாக அமெரிக்க தேசிய பாதுகாப்புக் கவுன்சில் செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறியதவாது:

பிலிப்பின்ஸில் அப்பாவிப் பொதுமக்களை பலி வாங்கிய குண்டுவெடிப்புக்கு அமெரிக்கா கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம். இந்த பயங்கரவாதச் செயல் தொடர்பான விசாரணைக்குத் தேவைப்படும் எந்த உதவியையும் அமெரிக்க அளிக்கத் தயாராக உள்ளது என்று அவர் கூறினார்.

 

அஞ்ச மாட்டேன்: அதிபர் டுடேர்தே குண்டு வெடிப்பு குறித்து

அதிபர் ரோட்ரிகோ டுடேர்தே கூறியதாவது: இந்த குண்டு வெடிப்பு பயங்ரவாதத் தாக்குதலாகும். பயங்கரவாதிகளுக்கு எதிராக ராணுவ நடவடிக்கைக்கு நான் உத்தரவிட்டுள்ள நிலையில், நாட்டுக்கே சவால் விடும் வகையில் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. நான் இதற்கு அஞ்ச மாட்டேன் என்று அதிபர் ரோட்ரிகோ டுடேர்தே கூறினார்.

மூலக்கதை