காவல்துறை வாகனம் மீது கார் மோதல்: நடிகர் அருண் விஜய் கைது எழும்பூர் நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்தது

தினமணி  தினமணி
காவல்துறை வாகனம் மீது கார் மோதல்: நடிகர் அருண் விஜய் கைது எழும்பூர் நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்தது

சென்னை நுங்கம்பாக்கத்தில் காவல்துறை வாகனம் மீது மோதி விபத்து ஏற்படுத்திய வழக்கில், நடிகர் அருண் விஜய் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

திரைப்பட நடிகர் விஜயகுமாரின் மகன் அருண் விஜய், நுங்கம்பாக்கத்தில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். நிகழ்ச்சி முடிந்த பின்னர், அங்கிருந்து சனிக்கிழமை அதிகாலை சொகுசு காரில் வீட்டுக்கு திரும்பி வந்துக் கொண்டிருந்தார். அவர் நுங்கம்பாக்கம் காவல் நிலையம் அருகே வரும்போது, அங்கு நின்று கொண்டிருந்த காவல்துறை வேன் மீது அருண் விஜயின் கார் மோதியது. அருண் விஜய் அதிக மதுபோதையில் காரை ஓட்டியதாலேயே விபத்து ஏற்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து, பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு ஆய்வாளர் சதீஷ் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டார்.

அருண் விஜயிடம் நடத்திய சோதனையில் அவர் போதையில் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அருண் விஜய்,அங்கிருந்து தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அருண் விஜய் காரை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

சரணடைந்த அருண் விஜய் கைது:

 இந்த நிலையில், தலைமறைவாக இருந்த அருண் விஜய், சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையர் அரவிந்தன் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தார். விசாரணையின் முடிவில் போலீஸார் அருண் விஜயை கைது செய்தனர்.

பின்னர் அவரை, எழும்பூர் 13 ஆவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். காவல்துறை தரப்பில் அருண் விஜயிக்கு ஜாமீன் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், ஜாமீன் வழங்கும் சட்டப்பிரிவுகளிலேயே அருண் விஜய் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்ததால், அவரை சொந்த ஜாமீனில் விடுவித்து நீதித்துறை நடுவர் கோபிநாத் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அருண் விஜய், சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

 

மூலக்கதை