பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தைத் திருப்பி தர தயார்: உயர்நீதிமன்றத்தில் எஸ்ஆர்எம் கல்வி அறக்கட்டளை தகவல்

தினமணி  தினமணி

"வேந்தர் மூவிஸ்' மதன் வசூலித்த ரூ.69 கோடி பணத்தைத் திருப்பி செலுத்துவதற்கு தயார் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.ஆர்.எம். கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

காணாமல் போன வேந்தர் மூவிஸ் மதனை கண்டுபிடித்து ஆஜர்படுத்தக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது தாய் ஆர்.எஸ்.தங்கம் தொடர்ந்த ஆள்கொணர்வு வழக்கு, மருத்துவப் படிப்பு இடத்துக்கு மதனிடம் பணம் கொடுத்து ஏமாற்றம் அடைந்த பெற்றோர்கள் தொடர்ந்த வழக்கு ஆகிய இரு வழக்குகளும் நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, வி. பாரதிதாசன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, எஸ்.ஆர்.எம். கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் ரவி பச்சமுத்து, பி.சத்தியநாராயணன் ஆகியோர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, அவர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேஷன், "எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்தில் மருத்துவப் படிப்புக்கு சீட்டு வாங்கி தருவதாகக் கூறி, பலரிடம் பணத்தை மதன் பெற்று தலைமறைவாகியிருக்கிறார். குற்றச்சாட்டு காரணமாக, நிறுவனத்தின் நற்பெயர் பாதிக்கப்படுகிறது. மேலும், பாதிக்கப்பட்டவர்களின் நிலையைக் கருதி மதன் வாங்கிய ரூ.69 கோடியை திருப்பி வழங்கத் தயார்' என்றார்.

இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டோர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் ஆர்.சி.பால்கனகராஜ், "மதனிடம் பணத்தை கொடுத்து ஏமாற்றம் அடைந்தவர்களுக்கு நேரடையாக பணத்தை வழங்க வேண்டும்' என்றார்.

அப்போது, திரைப்பட நிதிநிறுவன உரிமையாளர் போத்ரா ஆஜராகி, "வழக்கில் தன்னையும் பிரதிவாதியாக சேர்க்க வேண்டும். மதன் பற்றிய பல்வேறு தகவல்களை சொல்ல வேண்டும்' என்றார். இதற்கான மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:

எஸ்.ஆர்.எம். நிர்வாகம் தாக்கல் செய்த மனு குறித்து, காவல் துறையும், பாதிக்கப்பட்டோர் தரப்பும் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இதேநேரத்தில் மதனை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கு விசாரணையை செப்டம்பர் 15-க்கு தள்ளி வைக்கிறோம் என்றனர்.

பச்சமுத்துவை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

மோசடி வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரால் அண்மையில் கைது செய்யப்பட்ட எஸ்.ஆர்.எம்.கல்வி குழுமத் தலைவர் பச்சமுத்துவை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

பச்சமுத்து தரப்பில் ஜாமீன் கோரிய மனுவும், போலீஸ் தரப்பிலும் காவலில் எடுக்கக் கோரிய மனுவும் சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது பச்சமுத்துவை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸாருக்கு அனுமதி வழங்கி குற்றவியல் நீதிமன்ற நடுவர் பிரகாஷ் உத்தரவிட்டார்.

 

மூலக்கதை