ஆவிக்கு சான்றிதழ் தர முடியுமா? அதிர்ந்தது சீன போலிஸ்!

BBC  BBC
ஆவிக்கு சான்றிதழ் தர முடியுமா? அதிர்ந்தது சீன போலிஸ்!

ஒருவருடைய சுய விவரங்களில், பத்தாண்டுகளுக்கு முன்னர் இறந்துபோன இதே பெயருடைய ஒரு குற்றவாளியின் விவரங்களை சேர்த்து சீன அதிகாரிகள் குழப்பியுள்ளனர்.

ஒருவரின் அடையாள எண்ணை, அதே மாதிரியான இன்னொருவரின் அடையாள எண்ணோடு சேர்த்து குழப்பி விடுகின்ற தவறுகளை ஒழித்துவிட, சீன அரசு எடுத்து வரும் பெரும் முயற்சிகளுக்கு அப்பாற்பட்டு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

சீன ஊடகங்களால் இனம் காணப்பட்டுள்ள 45 வயதான சென் என்பவர், குவாங்சோவில் புதிய வேலை பெறுவதற்கு குற்றப் பின்னணியில்லா சான்றிதழ் பெற காவல்துறையிடம் விண்ணப்பித்துள்ளார்.

அந்த சான்றிதழை வழங்க காவல்துறையினர் மறுத்துவிட்டனர். அதற்கு அவர்கள் சொன்ன காரணத்தால் சென்னுக்கு மயக்கமே வந்துவிட்டது.

“கடத்தல் குற்றத்திற்காக உனக்கு மரண தண்டனை வழங்கப்பட்டு, 2006 ஆம் ஆண்டு நீ கொல்லப்பட்டுவிட்டதாக பதிவேடுகள் காட்டுகின்றன” என்றார்களே பார்க்கலாம்.

அத்தகைய தீர்ப்பு இதே பெயருடைய, ஒரே அடையாள எண்ணுடைய இன்னொரு மனிதருக்கு வழங்கப்பட்டது என்பதை, பின்னர் குவாங்தொங் வானொலி மற்றும் தொலைக்காட்சி வலையமைப்பினர் கண்டறிந்துள்ளனர்.

காவல்துறையினரிடம் இத்தகைய குற்றப்பதிவு இருந்த பின்னரும், தீர்ப்பு வழங்கப்பட்டதாக கூறப்படும் மரண தண்டனைக்கு பிந்தைய ஒரு தசாப்தக் காலம், திரு. சென் ஒரு இயல்பான வாழ்க்கையையே வாழ்ந்து வந்தார்.

இதற்கு முன்னர் எத்தகைய சிரமங்களையும், இது போன்று சந்தித்ததில்லை.

“இதற்கு முன்னர் நான் ஹாங்காங் மற்றும் மக்கௌவுக்கு பயணம் மேற்கொள்ள விண்ணப்பித்தபோது, பயண அனுமதி வழங்கப்பட்டு அரசால் அனுமதிக்கப்பட்டேன். இவையனைத்தும் புதிராக உள்ளன” என்று திரு.சென் ஒளிபரப்பாளரிடம் தெரிவித்தார்.

அந்த பயணச் சான்றிதழ் வழங்கப்பட்டதில் ஏதேோ தவறு நடந்துவிட்டது என்று குவாங்சோ காவல்துறை தெரிவித்திருக்கிறது.

இரு நபர்களின் சென் என்ற ஒரே பெயரின் சுய விவரங்களை குழப்பியிருப்பது சீனாவில் மிக அரிதாக நடைபெறும் ”ஒரே அடையாள எண் வழங்குவதால்” நிகழும் சம்பவமாகும்.

ஏற்கெனவே வழங்கப்பட்ட அடையாள எண்ணானது, நிர்வாகத்தின் தவறான செயல்பாட்டால், இன்னொருவருக்கு அடையாள எண்ணாக வழங்கப்படும்போது, இந்த சுய விவர மாற்றங்கள் அல்லது குழப்பங்கள் நடைபெற வாய்ப்புள்ளன.

இத்தகைய நிகழ்வுகள் அனைத்தையும் ஒழிப்பதற்கு சீனாவின் பொது பாதுகாப்பு அமைச்சகம் நடத்திய பரப்புரை ஒன்று, ஜூன் மாதம் தான் முடிவடைந்திருக்கிறது.

2009 ஆம் ஆண்டு இருந்த, 11 இலட்சம் ஒரே மாதிரியான அடையாள எண்களில் தற்போது பத்துக்கும் குறைவான எண்களே இருப்பதாக சின்குவா செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது..

மூலக்கதை