கூடங்குளம் அணுஉலை நாட்டுக்கு அர்ப்பணிப்பு

BBC  BBC
கூடங்குளம் அணுஉலை நாட்டுக்கு அர்ப்பணிப்பு

தமிழகத்தின் கூடங்குளம் அணுஉலையின் முதலாவது பிரிவு இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. தமிழக முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில், ரஷ்ய அதிபர் விளாதிமர் புதின், இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ஆகியோர் காணொளிக் காட்சி மூலம் அணு உலையை நாட்டுக்கு அர்ப்பணித்தனர்.

ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் இருந்தபடி அதிபர் புதினும் இந்தியத் தலைநகர் தில்லியில் இருந்தபடி பிரதமர் நரேந்திர மோதியும் சென்னையிலிருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் கூடங்குளத்திலிருந்து அதிகாரிகளும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, கூடங்குளம் அணு உலை, இந்திய - ரஷ்ய நட்புறவின் அடையாளமாகத் திகழ்கிறது என்றும் தமிழகத்தில் சுத்தமான, பசுமையான மின்சாரத்தை உற்பத்தி செய்யும் முயற்சியின் ஒரு பகுதி என்றும் குறிப்பிட்டார்.

தன்னுடைய கடந்த பத்தாண்டு கால ஆட்சியில் இந்த அணு உலை கட்டப்படுவதற்கு தான் மிகவும் ஆதரவளித்ததாகவும் இந்த அணு உலைக்கு எதிராகப் போராட்டம் நடத்திய மக்களின் அச்சங்களைப் போக்கியதாகவும் தெரிவித்தார்.

மக்களிடம் பேசுவதன் மூலமே அவர்களது அச்சத்தைப் போக்க முடியும் என்றும் இதற்காக 2015 பிப்ரவரியில் நிபுணர் குழு அமைத்து மக்களிடம் பேசியதாகவும் ஜெயலலிதா தெரிவித்தார்.

கூடங்குளம் அணு உலையில் உயர்ந்தபட்ச பாதுகாப்பு இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் அணு உலையின் 2வது பிரிவையும் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென்றும் ஜெயலலிதா குறிப்பிட்டார்.

இதற்குப் பிறகு பேசிய ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், இந்தியாவில் பெரிய அளவில் அணு உலைத் திட்டங்களைச் செயல்படுத்தவிருப்பதாகத் தெரிவித்தார். 3 மற்றும் 4ஆம் அணு உலைகளுக்கான பணிகள் இந்த ஆண்டிற்குள் துவங்கும் என்றும் கூறினார்.

இந்த வருட இறுதிக்குள், 5 மற்றும் 6ஆம் அணு உலைகளுக்கான ஒப்பந்தம் இறுதிசெய்யப்படும் என நம்புவதாகவும் புதின் கூறினார்.

இறுதியாகப் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, கூடங்குளம் அணு உலை, இந்திய - ரஷ்ய நட்புறவின் சின்னம் என்று கூறினார்.

இந்தியாவில் உள்ள அணு உலைகளிலேயே கூடங்குளம் அணு உலைதான், ஆயிரம் மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட ஒரே அணு உலை என்றும் தொடர்ச்சியாக, அங்கு பல உலைகள் கட்டப்படவிருப்பதாகவும் தெரிவித்தார்.

அணுஉலைத் தொழில்நுட்பம் சூழலுக்கு உகந்தது என்றும் இது பெருமை கொள்ளத்தக்க சாதனை என்றும் பிரதமர் மோதி கூறினார்.

இந்திய - ரஷ்ய உறவில் இது புதிய கோணத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் பிரதமர் மோதி தெரிவித்தார்.

பிரதமர் மோதி பேசும்போது, ரஷ்ய மொழியிலும் தமிழிலும்கூட சில வார்த்தைகளைப் பேசினார்.

இந்த நிகழ்வில் தில்லியிலிருந்து வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளத்தில் இந்த அணு உலையை அமைப்பதற்கு அங்குள்ள மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து நீண்ட காலமாகப் போராடிவருகின்றனர்.

2011 - 12ஆம் ஆண்டில் இந்தப் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியது.

இந்தப் போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளரான உதயகுமார், இந்த நிகழ்வு ஒரு ஏமாற்று வேலை என வர்ணித்துள்ளார்.

இந்தியாவில் தற்போது 6 இடங்களில் 19 அணு உலைகள் நிறுவப்பட்டுள்ளன. தமிழகத்தில் கல்பாக்கத்திலும் கூடங்குளத்திலும் அணு உலைகள் இயங்கிவருகின்றன. கூடங்குளத்தில் உள்ள இரண்டாவது பிரிவு, சமீபத்தில் சோதனை முறையில் மின் உற்பத்தியைத் துவங்கியது.

மூலக்கதை