சேலம் ரயில் கொள்ளை: போலீஸ் விசாரணை தீவிரம்

BBC  BBC
சேலம் ரயில் கொள்ளை: போலீஸ் விசாரணை தீவிரம்

சேலம் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் கொண்டுவரப்பட்ட பணத்தில் கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் பல முனைகளிலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.

ஆனால், இதுவரை எந்தத் துப்பும் கிடைக்கவில்லையென காவல்துறை தெரிவித்திருக்கிறது.

சேலம் கோட்டத்தில் உள்ள வங்கிகளில் சேரும் சேதமடைந்த, செல்லாத நோட்டுகள் ஒன்றாகத் திரட்டப்பட்டு 226 பெட்டிகளில் அடைக்கப்பட்டன. இதில் சுமார் 345 கோடி ரூபாய் பணம் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்தப் பணத்தை சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக் கிளைக்கு அனுப்புவதற்காக திங்கட்கிழமையன்று சேலத்திலிருந்து சென்னைக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்றப்பட்டது. இந்த ரயில் நேற்று அதிகாலையில் சென்னை வந்து சேர்ந்தது.

காலை 11 மணியளவில் பணப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த சரக்கு பெட்டியை திறந்தபோது பணப்பெட்டிகள் சில உடைக்கப்பட்டிருந்ததோடு, ரயில் பெட்டின் மேலேயேயும் ஒரு ஆள் நுழையும் அளவுக்கு ஓட்டை போடப்பட்டிருந்தது.

இந்த சம்பவத்தில் ஒட்டுமொத்தமாக 5.75 கோடி ரூபாய் பணம், கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவம் பல நாட்களாகத் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கக்கூடும் என தெரியவருவதாக சேலம் கோட்ட ரயில்வே பாதுகாப்புப் படையின் ஆணையர் ராஜ் மோகன் இன்று காலையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ரயில் பெட்டியில் எரிவாயு மூலம் இயங்கும் அறுப்பான்களை வைத்து ஓட்டை போடப்பட்டதாக முன்னதாகக் கருதப்பட்டது. ஆனால், இந்த ஓட்டை கத்திரிக்கோல் மூலம் போடப்பட்டிருக்கவே வாய்ப்பு அதிகம் என ராஜ் மோகன் கூறியிருக்கிறார்.

சேலத்திலிருந்து இந்த ரயில் சென்னை வரும் வழியில் பத்து நிலையங்களில் நின்று வருகிறது. அதில், சேலத்திலிருந்து விருத்தாசலம் வரை டீசல் எஞ்சின் மூலம் இந்த ரயில் இயக்கப்படுகிறது. விருதாசலத்தில் மின்சார எஞ்சின் பொருத்தப்பட்டு ரயில் சென்னையை வந்தடைகிறது. இதற்காக விருதாச்சலம் ரயில் நிலையத்தில் கூடுதல் நேரம் இந்த ரயில் நிற்கும். ஆகவே, அங்கு ரயில் மீது ஓட்டை போடப்பட்டிருக்கலாம் என கருதப்பட்டது.

ஆனால், விருதாச்சலத்தில் ரயில் நிற்கு நடைமேடையில் ரயிலுக்கு மேலே உயர் அழுத்த மின் கம்பிகள் செல்வதால் அங்கு இந்த சம்பவம் நடந்திருக்க முடியாது என கருதுவதாக திருச்சி ரயில்வே கோட்டத்தின் ரயில்வே பாதுகாப்புப் படை கண்காணிப்பாளர் ஆனி விஜயா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சேலத்திலிருந்து விருதாச்சலம் வரும் வழியில்தான் ரயிலின் மீது ஓட்டை போடப்பட்டிருக்க வேண்டும் என்றும் ரயில் பெட்டிகளின் தொழில்நுட்பம் தெரிந்த நபர்கள் மட்டுமே இதைச் செய்திருக்க முடியும் என்றும் ஆனி விஜயா தெரிவித்தார்.

தவிர ஓடும் ரயில் இதுபோல கச்சிதமாக வெட்ட முடியாது என்பதால், ரயில் நிற்கும்போதுதான் இதனை வெட்டியிருக்க வேண்டும் என்றும் ஆனி விஜயா தெரிவித்தார்.

தற்போது வங்கி அதிகாரிகள், பணப் பெட்டியை ரயில் ஏற்றிய பணியாளர்கள் உட்பட அனைவரிடமும் தற்போது விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

இன்றைய தினமும் கொள்ளை நடந்த ரயில் பெட்டியில் தடயவியல் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

மூலக்கதை