இரோம் ஷர்மிளா: முடிவுக்கு வரும் உலகிலேயே நீண்ட உண்ணாவிரதம்

BBC  BBC
இரோம் ஷர்மிளா: முடிவுக்கு வரும் உலகிலேயே நீண்ட உண்ணாவிரதம்

இந்தியச் செயற்பாட்டாளர் இரோம் ஷர்மிளா சர்ச்சைக்குரிய ஒரு சட்டத்திற்கு எதிராக 16 ஆண்டுகளாக நடத்தி வந்த உண்ணாவிரதத்தை இன்று முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை அவருடைய உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வருவதாகவும், இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் நடைபெறயிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக பரப்புரை மேற்கொண்டு அரசியிலில் களமிறங்கப் போவதாகவும் கடந்த மாதம் நீதிமன்றத்தில் அவர் தெரிவித்தார்.

ஆயுதப்படைப் பிரிவுகளின் சிறப்பு அதிகாரச் சட்டத்திற்கு எதிராக அவர் இந்த நீண்ட உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தார்.

பிடியாணை இல்லாமல் கைது செய்வது, குறிப்பிட்ட சூழ்நிலைகளில் சுட்டு கொல்வது போன்ற சிறப்பு அதிகாரங்களை இந்த சட்டம் படைவீரர்களுக்கு வழங்குவதற்கு எதிராக அவருடைய இந்த போராட்டம் நடைபெற்றது.

மணிப்பூர், இந்தியாவின் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீர் உள்பட இந்தியாவின் பல மாநிலங்களில் இந்த ஆயுதப்படைப் பிரிவுகளின் சிறப்பு அதிகாரச் சட்டம் நடைமுறையில் உள்ளது.

ஒரு தசாப்த காலமாக ஷர்மிளாவுக்கு மூக்கில் பொருத்தப்பட்ட ஒரு குழாய் வழியாக கட்டாயமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது.

16 ஆண்டுகளுக்கு முன்னதாக மணிப்பூரில் 10 பொது மக்கள் இந்தியப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டபோது, ஷர்மிளா இந்த உண்ணாவிரத்தை தொடங்கினார்.

இந்த 16 ஆண்டுகளில் பெரும்பாலும் மணிப்பூரின் தலைநகர் இம்பாலில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவர் கழித்துள்ளார். அங்கு மருந்தும், நீராகார உணவுகளும் அவருக்கு கட்டாயமாக செலுத்தப்பட்டு வந்தது.

தற்கொலை செய்துகொள்ள முயற்சிப்பதாக அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நிராகரித்த நீதிமன்றம், 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஷர்மிளாவை விடுதலை செய்தது.

ஆனால், அவருடைய போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மறுத்துவிட்டதால் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

இரண்டு வாரத்திற்கு ஒருமுறை மணிப்பூர் உயர்நீதிமன்றம் சென்று தன்னுடைய போராட்டத்தை அவர் உறுதிசெய்து வந்திருக்கிறார்.

அவருடைய இந்த போராட்டம் உலக அளவில் அவருக்கு அங்கீகாரத்தை பெற்றுத் தந்தது. அம்னெஸ்டி சர்வதேச சபை அவரை மனசாட்சியின் கைதி என்று வர்ணித்துள்ளது.

உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகங்களின் கவனத்தை இந்த செயற்பாட்டாளர் ஈர்த்துள்ளார்.

பெண்கள் மற்றும் சிவில் உரிமைகள் குழுக்களின் ஆதரவையும் ஷர்மிளா பெற்றிருக்கிறார்.

இந்தியப் படையினரால் கொல்லப்பட்ட 10 பொதுமக்களின் நினைவாக, சம்பவம் நடந்த இடத்தில் நினைவகம் ஒன்று கட்டப்பட்டுள்ளது.

ஏறக்குறைய இரண்டரை மில்லியன் (25 லட்சம்) மக்கள்தொகை கொண்ட மணிப்பூரில், கிளர்ச்சி குழுக்களை எதிர்த்து போராட பெரியதொரு படைப்பிரிவும், துணை ராணுவப் படையும், மாநில போலிஸ் பிரிவும் அங்கு குவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை