மிடாஸ் ஆலை யாருக்குச் சொந்தம் ? கருணாநிதி கேள்வி

BBC  BBC
மிடாஸ் ஆலை யாருக்குச் சொந்தம் ? கருணாநிதி கேள்வி

தமிழகத்தில் உள்ள அரசு மதுகடைகளில் விற்பனை செய்வதற்காக கடந்த 2013-14ஆம் ஆண்டில் மிடாஸ் நிறுவனத்தில் இருந்து மட்டும் 2280 கோடி ரூபாய் அளவுக்கு மதுபானங்கள் வாங்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டியிருக்கும் தி.மு.க. தலைவர் கருணாநிதி, அந்த ஆலை யாருக்குச் சொந்தமானது எனக் கேள்வியெழுப்பியிருக்கிறார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று மதுவிலக்கு தொடர்பாக விவாதம் நடந்தபோது, தி.மு.க. ஆட்சிக் காலத்தில்தான் அது ரத்துசெய்யப்பட்டதாக முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

அதற்குப் பதிலளிக்கும் விதமாக அறிக்கை வெளியிட்டுள்ள கருணாநிதி, 1971 தன் மதுவிலக்கை ஒத்திவைத்ததாகவும் 1974லேயே அதனை மீண்டும் அமல்படுத்தியதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

அதற்குப் பிறகு 1981ல் அ.தி.மு.க. ஆட்சியில்தான் கள், சாராய விற்பனைக்காக மதுவிலக்கு மீண்டும் நீக்கப்பட்டதாக கருணாநிதி சுட்டிக்காட்டியிருக்கிறார்.

மலிவு விலை மது விற்பனையை ரத்து செய்துவிட்டு, மீண்டும் அ.தி.மு.க. ஆட்சியில் அந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டதாகவும் கருணாநிதி கூறியிருக்கிறார்.

2013-14ஆம் ஆண்டில் தமிழக மதுபானக் கடைகளுக்காக எந்த நிறுவனத்தில் இருந்து எவ்வளவு ரூபாய்க்கு மதுபானங்கள் வாங்கப்பட்டன என தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டபோது, எல்லா நிறுவனங்களையும்விட அதிகபட்சமாக மிடாஸ் கோல்டன் டிஸ்டில்லரீஸ் நிறுவனத்திலிருந்து 2, 280 கோடி ரூபாய் அளவுக்கு மதுபானம் வாங்கப்ப்டடிருப்பதைச் சுட்டிக்காட்டியிருக்கும் கருணாநிதி, அந்த நிறுவனம் யாருக்குச் சொந்தம் என கேள்வியெழுப்பியிருக்கிறார்.

மதுவிலக்கின் மீது உண்மையான அக்கறை இருந்தால், கடந்த ஆண்டு காலத்தில் அதனை அமல்படுத்தாதது ஏன் என்றும் அவர் கேட்டுள்ளார்.

மூலக்கதை