அருணாச்சல பிரதேசத்தின் புதிய முதல்வராக பெமா காண்டு பதவி ஏற்றார்!

விகடன்  விகடன்
அருணாச்சல பிரதேசத்தின் புதிய முதல்வராக பெமா காண்டு பதவி ஏற்றார்!

ஈட்டாநகர்: அருணாச்சல பிரதேசத்தின் புதிய முதல்வராக பெமா காண்டு இன்று ஈட்டா நகரில் பதவி ஏற்று கொண்டார்.

அருணாச்சலப் பிரதேசத்தில் முதல்வர் கலிகோ புல் தலைமையிலான அரசு, சட்டவிரோதமானது என்று அண்மையில் அறிவித்த உச்ச நீதிமன்றம், அங்கு நபம் துகி தலைமையிலான அரசை மீண்டும் ஏற்படுத்தி உத்தரவிட்டது.

இதையடுத்து, முதல்வர் நபம் துகியிடம் கடந்த சனிக்கிழமையன்று பேரவையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும்படி ஆளுநர் (பொறுப்பு) ததாகத ராய் கேட்டுக் கொண்டார். இந்நிலையில், பேரவையில் சனிக்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு, நபம் துகி, பேரவை காங்கிரஸ் குழுத் தலைவர் பதவியையும், மாநில முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்தார்.

இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலிகோ புல் உள்பட 44 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். ஆனால், சட்டப்பேரவைத் தலைவர் நபம் ரேபியா கலந்து கொள்ளவில்லை. பேரவை காங்கிரஸ் குழுத் தலைவர் பதவிக்கு பெமா காண்டுவின் பெயரை நபம் துகி முன்மொழிந்ததால், அவரை புதிய தலைவராக அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஏற்றுக் கொண்டனர். பெமா காண்டு உடனடியாக  ஆளுநர் ததாகத ராயிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.


இந்நிலையில், அருணாச்சல பிரதேசத்தின் புதிய முதல்வராக பெமா காண்டு இன்று நண்பகல் 12.15 மணிக்கு ஈட்டா நகரில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் பதவி ஏற்று கொண்டார். அவருக்கு மாநில ஆளுநர் ததாகத ராய் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பெமா காண்டுவுடன் சேர்ந்து சவ்னா மெய்ன் மாநிலத்தின் துணை முதல்வராக பதவி ஏற்று கொண்டார்.

அருணாச்சல பிரதேசத்தின் முதல்வராக பதவி ஏற்றுள்ள 37 வயதாகும் பெமா காண்டு, டெல்லி பல்கலைக் கழகத்தின் ஹிந்து கல்லூரியில் பட்டப்படிப்பு பயன்றவர். கடந்த 2000 ஆம் ஆண்டு காங்கிரஸில் இணைந்தார். தனது தந்தையின் மறைவால் காலியான முக்டூ (எஸ்.டி.) தொகுதியில், 2011 ஆம் ஆண்டில் போட்டியின்றி எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் பெமா காண்டு.

அதன் பின்னர், மாநில நீர்வளம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் பதவி அவருக்கு அளிக்கப்பட்டது. கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தேர்தலில் முக்டூ தொகுதியில் அவர் போட்டியின்றி மீண்டும் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை