‘ஜிகா’ வைரஸ் நோய் பரவும் பீதி ; ஒலிம்பிக் ரத்து செய்யப்படாது

தமிழ்நியூஸ்நெற்  தமிழ்நியூஸ்நெற்
‘ஜிகா’ வைரஸ் நோய் பரவும் பீதி ; ஒலிம்பிக் ரத்து செய்யப்படாது

பிரேசிலில் ‘ஜிகா’ வைரஸ் தாக்கம் இருப்பதால், ரியோ ஒலிம்பிக் போட்டியை வேறு இடத்திற்கு மாற்றவோ அல்லது ஒத்திவைக்கவோ வேண்டும் என வற்புறுத்தப்பட்டுள்ளது. ஆனால் உலக சுகாதார நிறுவனம் இதனை நிராகரித்து விட்டது.

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் விளையாட்டு திருவிழா ஒலிம்பிக். இந்த ஆண்டு பிரேசிலில் உள்ள ரியோ நகரில் வரும் ஆக.,5-21ம் தேதி வரை நடக்கவுள்ளது. இதில் சாதிக்க விளையாட்டு நட்சத்திரங்கள் தீவிர பயிற்சி பெற்று வருகின்றனர்.

மறுபுறம், ‘ஜிகா’ வைரசின் தாக்கம் சில மாதங்களாக பிரேசிலை உலுக்கி வருகிறது. கருவில் உள்ள குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதால், வீரர், வீராங்கனைகள் அச்சத்தில் உள்ளனர். ஒலிம்பிக்கில் பங்கேற்பதை தவிர்க்கும் எண்ணத்தில் இருப்பதாக தெரிகிறது.

இதனிடையே, இது குறித்து தலைசிறந்த 150 மருத்துவர்கள் அடங்கிய குழு, உலக சுகாதார அமைப்புக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில்,’ ‘ஜிகா’ வைரஸ் பாதித்தால், குழந்தைகள் சிறிய தலையுடன் பிறக்கும். இளம் தலைமுறையினர் நரம்பு சம்பந்தமான நோயால் அவதிப்படுவர். இந்த நிலையில், ஒலிம்பிக்கில் பங்கேற்க பிரேசிலுக்கு சுமார் 5 லட்சம் வெளிநாட்டு பயணிகள் வர உள்ளனர். இதன் மூலம்,’ஜிகா’ வைரஸ் விரைவில் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், இங்கிருந்து ஒலிம்பிக்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். முடியாதபட்சத்தில் ஒத்திவைக்கலாம்,” என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், உலக சுகாதார நிறுவனம், ஒலிம்பிக்கை மாற்றவோ அல்லது ஒத்தி வைக்கவோ முடியாது என மறுத்து விட்டது .

மூலக்கதை