லண்டன் மேயருக்கான தேர்தலில் தொழிற்கட்சி வேட்பாளர் சித்திக் கான் வெற்றி!

தமிழ்நியூஸ்நெற்  தமிழ்நியூஸ்நெற்
லண்டன் மேயருக்கான தேர்தலில் தொழிற்கட்சி வேட்பாளர் சித்திக் கான் வெற்றி!

மே 6 இல் நடைபெற்ற லண்டன் மேயருக்கான தேர்தலில் தொழிற்கட்சி வேட்பாளர் சித்திக் கான் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு எதிராகப் போட்டியிட்ட சாக் கோல்ட்சிமித்தைக் காட்டிலும் சித்திக் கான் பத்து வீதத்ததுக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டி உள்ளார்.

இத்தேர்தல் தொழிற்கட்சியின் தலைவர் ஜெரிமி கோபின் னின் தலைமைத்துவத்திற்கான பரீட்சைக்களமாகவே பார்க்கப்பட்டது. ஜெரிமி கோபின் தலைமையிலான தொழிற்கட்சி இத்தேர்தல்களில் பலத்த தோல்வியைச் சந்திக்கும் என ஊடகங்கள் ஊகங்களை வெளியிட்டு இருந்தன. பிபிசி உட்பட ஊடகங்கள் ஜெரிமி கோபினை எள்ளி நகையாடின.

இவை எல்லாவற்றுக்கும் மத்தியில் ஜெரிமி கோபின் தனது வாக்கு வங்கியை தக்கவைத்துக் கொண்டார். சில வெற்றிகளையும் பெற்றுக்கொண்டார்.

ஸ்கொட்லாந்தில் எதிர்பார்க்கப்பட்டது போல் 2ம் இடத்தில் இருந்த தொழிற்கட்சி (24 ஆசனங்கள்) மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. கொன்சவேடிவ் கட்சி (31 ஆசனங்கள்) 2ம் இடத்தைப் பெற்றது. ஸ்கொடிஸ் நஷனல் பார்டி – எஸ்என்பி (63 ஆசனங்கள்) அதிகப்படியான ஆசனங்களை வென்று முதல் இடத்தை தக்கவைத்துக்கொண்டது.

வேல்ஸ் அசம்பிளியில் தொழிற்கட்சி 29 ஆசனங்களைப் பெற்று முதன்மைக் கட்சியாகி உள்ளது. பிலைட் கம்ரு 12 ஆசனங்களையும் கொன்சவேடிவ் கட்சி 11 ஆசனங்களையும் யூகிப் முதற்தடவையா வேல்ஸ் அசம்பிளியில் ஆசனங்களைப் பெற்றுள்ளது. நான்கு அல்லது 5 ஆசனங்களையே எதிர்பார்த்தபோதும் 7 ஆசனங்களை தக்க வைத்துக்கொண்டுள்ளது.

இங்கிலாந்தில் இடம்பெற்ற 124 கவுன்சில்களுக்கான தேர்தலில் 118 முடிவுகள் வெளியாகி உள்ளது. அதில் 56 கவுன்சில்களை தொழிற்கட்சி தக்கவைத்துள்ளுது. கொன்சவேடிவ் கட்சி 34 கவுன்சில்களையும் லிபிரல் டெமோகிரட் கட்சி 4 இடங்களையும் தக்க வைத்துள்ளது.

லண்டன் அசம்பிளியில் உள்ள 14 தொகுதிகளில் தொழிற்கட்சி 9 தொகுதிகளை வென்றுள்ளது. லண்டன் அசம்பிளியில் 43 வீதமானவர்கள் தொழிற்கட்சியைத் தெரிவு செய்துள்ளனர். 31 வீதமானவர்கள் கொன்சவேடிவ் கட்சியைத் தெரிவு செய்துள்ளனர்.

தொழிற்கட்சியின் வேட்பாளர் சித்திக் கானை இஸ்லாமியத் தீவிரவாதத்துடன் தொடர்புபடுத்தி சாக் கோல்சிமித்தும் கொன்சவேடிவ் கட்சியும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். யுதர்களுக்கு எதிரான கருத்தியலை – அன்ரி செமற்றிசம் – தொழிற்கட்சி கொண்டிருப்பதான பிரச்சாரம் தீவிரப்படுத்தப்பட்டு முன்னாள் தொழிற்கட்சி மேயர் கென் லிவிங்ஸ்ரனை கட்சியில் இருந்து நீக்க வேண்டிய நிர்ப்பந்தமும் தொழிற்கட்சிக்கு ஏற்பட்டது. இவற்றுக்கிடையிலும் தொழிற்கட்சி வெற்றிபற்றமை குறிப்பிடத்தக்கது.

லண்டன் மேயருக்கு போட்டியிட்டவர்களில் சாக் கோல்ட்சிமித் பரம்பரை பணக்காரர் மில்லியனெயர். மாறாக சித்திக் கான் குடிரவவாளரான பஸ் ஓட்டுனரின் மகன்.

மூலக்கதை