மஹிந்த, ரணிலுக்கு இடையில் அரசியல் உடன்படிக்கை! மனம் திறந்தார் மைத்திரி

தமிழ்வின்  தமிழ்வின்
மஹிந்த, ரணிலுக்கு இடையில் அரசியல் உடன்படிக்கை! மனம் திறந்தார் மைத்திரி

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அரசாங்கமொன்றை அமைப்பதற்கான உடன்படிக்கையொன்றை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவே ஏற்படுத்திக் கொண்டார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

1956ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பெற்றுக் கொண்ட வெற்றி இந்த ஆண்டுடன் 60 வருடங்கள் பூர்த்தியாகின்றது.

இதனை முன்னிட்டு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற  நிகழ்வில் கலந்துக்கொண்டு கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையில் 2007ஆம் ஆண்டு மார்ச் மாதம் இவ்வாறான உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் என்ற வகையில் தானும், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் அந்த கட்சியின் தவிசாளர் மலிக் சமரவிக்ரமவும் அலரிமாளிகையில் வைத்து இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

எனினும், குறித்த உடன்படிக்கை சில மாதங்களில் முறிவடைந்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்த 27 பேருக்கு அமைச்சு பதவிகளை வழங்கி அவர்களை தனது பக்கத்திற்கு ஈர்ப்பதற்கு மஹிந்த ராஜபக்ஸ நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்ததாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், நாட்டை தவறான பாதைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையை நிறுத்துவதற்காகவே தான் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட்டதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த நிகழ்விற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரட்ண உள்ளிட்ட சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கரந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை