பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு லிப்ட் வசதி அமைக்கவேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

NEW INDIA NEWS  NEW INDIA NEWS
பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு லிப்ட் வசதி அமைக்கவேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

மாற்றுத்திறனாளிகள் எளிதில் ஏறி, இறங்கும் விதமாக அனைத்து அரசு பேருந்துகளிலும் ‘லிப்ட்’ வசதி ஏற்படுத்தவேண்டும் என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில், ராஜிவ்ராஜன் என்பவர் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி ஏறி, இறங்க ‘லிப்டுடன்’ கூடிய சிறப்பு படிக்கட்டு வசதிகள் இல்லை.

மற்ற மாநிலங்களில் இந்த வசதி உள்ளன. எனவே, இந்த வசதிகளை செய்துதர தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனு கடந்த 2005–ம் ஆண்டு முதல் சென்னை ஐகோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

அப்போது சென்னையில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் சிலவற்றில் ‘லிப்ட்’ வசதியுடன் கூடிய படிக்கட்டுகள் பொருத்தப்பட்டு ஐகோர்ட்டு நீதிபதிகளிடம் காட்டப்பட்டன.

இந்த வழக்கில் ஐகோர்ட்டுக்கு உதவும் நபராக ஒரு வக்கீலை சட்ட ஆணையராக நீதிபதிகள் நியமித்து இருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, சட்டஆணையராக நியமிக்கப்பட்ட வக்கீல் ஒரு அறிக்கை தாக்கல் செய்தார்.

அதில், இதுவரை அரசு பேருந்துகளில் உள்ள பல்வேறு குறைபாடுகளை சுட்டிக்காட்டி இருந்தார். இதையடுத்து வழக்கு தொடர்பாக நீதிபதிகள் தங்கள் உத்தரவை பிறப்பித்தனர்.

அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் ஆஜரான வக்கீல், ஆரம்பத்தில் ஒரு சில பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதாக ஏறி இறங்க, லிப்ட் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன.

ஆனால், அதற்கு போதுமான வரவேற்பு இல்லை. அதனால் குறிப்பிட்ட சில வழித்தடங்களில் மட்டும் லிப்ட் வசதிகளுடன் கூடிய பேருந்துகள் இயக்கப்படுவதாக கூறினார்.

இந்த வழக்கின் நோக்கத்தை சரியாக புரிந்து கொள்ளாமல் அரசு அதிகாரிகள் செயல்பட்டுள்ளனர். மாற்றுத்திறனாளிகள் இந்த வழிதடத்தில், எந்த பேருந்தில் பயணிப்பார்கள் என்று யாராலும் கூற இயலாது.

அனைத்து பேருந்துகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் செய்து கொடுக்கப்படவேண்டும் என்பதுதான் இந்த வழக்கின் நோக்கமாகும்.

எனவே புதிதாக வாங்கும் அனைத்து அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி எளிதில் ஏறி, இறங்கும் வகையில் படிக்கட்டு உள்ளிட்ட வசதிகள் இருக்க வேண்டும் என அரசு போக்குவரத்து கழகங்களுக்கு உத்தரவிடுகிறோம்.

இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அரசு போக்குவரத்துக்கழகங்கள், பொதுப்பணித்துறையினர், மாற்றத்திறனாளிகள் மறுவாழ்வுத்துறை ஆணையர் ஆகியோர் 8 வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்.

இந்த வழக்கு விசாரணையை வருகிற ஜூன் 28ம் திகதிக்கு தள்ளிவைக்கிறோம் என்று தெரிவித்திருந்தனர்.

மூலக்கதை