கேரள காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: போட்டியில் இருந்து விலகுவதாக உம்மன் சாண்டி மிரட்டல்

மாலை மலர்  மாலை மலர்
கேரள காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: போட்டியில் இருந்து விலகுவதாக உம்மன் சாண்டி மிரட்டல்

திருவனந்தபுரம், மார்ச். 31–

தமிழகத்தை போலவே கேரளாவிலும் வருகிற மே மாதம் 16–ந் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது.

இம்மாநிலத்தில் இதுவரை நடந்த தேர்தல்களில் காங்கிரசும், கம்யூனிஸ்டு கட்சியும் மட்டுமே மாறிமாறி ஆட்சி செய்து வருகிறது. தற்போது அங்கு உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. எனவே அடுத்த தேர்தலில் இங்கு கம்யூனிஸ்டு கட்சியின் ஆட்சி மலரும் என அக்கட்சியினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.

அவர்களின் எண்ணத்திற்கு எதிராக அங்கு தற்போது பாரதீய ஜனதா தலைமையிலான கூட்டணி பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளது. இந்த அணிக்கு வெள்ளாப்பள்ளி நடேசன் தலைமையிலான கட்சி ஆதரவு தெரிவித்து உள்ளது. இதனால் பாரதீய ஜனதா கூட்டணி இத்தேர்தலில் 3–வது அணியாக உருவாகியுள்ளது.

எப்போதும் இல்லாத வகையில் இம்முறை 3 அணிகள் களத்தில் இருப்பதால் இப்போது நடக்கும் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என அக்கட்சியினர் கருதுகிறார்கள்.

எனவே இத்தேர்தலில் புதியவர்களையும், ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகாதவர்களையும் வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் சுதீரன் தெரிவித்தார். இதற்காக அவர் ஒரு புதிய திட்டத்தையும் அறிவித்தார்.

அதன்படி ஏற்கனவே 4 முறை தேர்தலில் நின்று வெற்றி பெற்றவர்கள் இத்தேர்தலில் அவர்களாகவே போட்டியில் இருந்து விலகி கொள்ள வேண்டும், இது போல ஊழல் புகாரில் சிக்கியவர்களும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு வரக்கூடாது என அறிவித்தார். சுதீரனின் கருத்துக்கு கட்சி நிர்வாகிகள் பலரும் வரவேற்பு தெரிவித்தனர். ஆனால் கட்சியின் மூத்த நிர்வாகிகள் இதை கேட்டு முகம் சுழித்தனர். சுதீரனின் கருத்து ஏற்கப்பட்டால் அது தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கருதிய அவர்கள் சுதீரனின் திட்டத்தை ஏற்ககூடாது என கட்சியின் மேலிடத்தை வலியுறுத்தினர்.

மேலும் சுதீரன், அவரது ஆதரவாளர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கவே இம்முடிவை அறிவித்து இருப்பதாகவும், இதை ஏற்க கூடாது எனவும் கூறினர்.

சுதீரனின் அறிவிப்பால் இப்போது முதல்–மந்திரியாக இருக்கும் உம்மன்சாண்டிக்கும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அவரும் காங்கிரஸ் சார்பில் பலமுறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

அதோடு அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளும் உள்ளன. எனவே உம்மன்சாண்டியை போட்டியில் இருந்து வெளியேற்றவே மாநில தலைவர் சுதீரன் இக்கருத்தை தெரிவித்ததாக உம்மன்சாண்டியின் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டினர்.

இதற்கிடையே மாநில தலைவர் அறிவிப்பை கட்சி மேலிடம் ஏற்றுக்கொண்டால் தானும் போட்டியில் இருந்து விலகிகொள்வதாக உம்மன்சாண்டி தனது ஆதரவாளர்களிடம் கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் கட்சியின் மாநில தலைவருக்கு எதிராக போர்கொடி உயர்த்தினர்.

தேர்தல் நேரத்தில் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள இக்குழப்பத்திற்கு உடனடி தீர்வு கண்டால் மட்டுமே தேர்தலை எதிர்கொள்ள முடியும் என கட்சி மேலிடம் கருதுகிறது. எனவே அவர்கள் இருதரப்பினரையும் சமரசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மூலக்கதை