ஐதராபாத் அருகே திருமண கோஷ்டியினர் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து: 7 பேர் பலி

மாலை மலர்  மாலை மலர்
ஐதராபாத் அருகே திருமண கோஷ்டியினர் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து: 7 பேர் பலி

நகரி, மார்ச். 31–

தெலுங்கானா மாநிலம் மெகபூப்நகர் மாவட்டம் உத்ராஜ் பல்லியைச் சேர்ந்தவர் ராமராஜு. இவருக்கும் தாசாராம் கிராமத்தை சேர்ந்த சிவலிலா என்ற பெண்ணுக்கும் நேற்று மணமகன் வீட்டில் திருமணம் நடந்தது. மணமகனின் பெற்றோர்கள் ஏற்கனவே உத்ராஜ்பல்லிக்கு சென்று விட்டனர்.

அவரது உறவினர்கள் ஒரு வேனில் திருமண விழாவுக்கு புறப்பட்டனர். வேனில் 25–க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். சைதப்பா என்பவர் வேனை ஓட்டி வந்தார்.

ஐதராபாத் அருகே உள்ள ரங்காரெட்டி மாவட்டம் பரிசி கிராமத்தை வேன் அடைந்த போது திடீர் என கவிழ்ந்தது. 2 முறை குட்டிக் கரணம் அடித்தது.

இந்த விபத்தில் 3 பெண்கள் உள்பட 7 பேர் பலியானார்கள். 20 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் பரிசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். டிரைவர் குடிபோதையில் இருந்ததாகவும் வேனை அதிவேகமாக ஒட்டி வந்ததாலும் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வேன் கவிழப் போகிறது என்பதை உணர்ந்த அவர் வேனில் இருந்து குதித்து தப்பி ஓடிவிட்டார்.

இன்னும் 1 கிலோ மீட்டர் கடந்து இருந்தால் திருமண வீட்டை அடைந்து இருக்கலாம். ஆனால் அதற்குள் விபத்தை ஏற்படுத்தி 7 பேர் சாவுக்கு காரணமாகி விட்ட டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

மூலக்கதை