பீகாரில் நாளை முதல் மதுவிலக்கு அமல்: நாங்கள் மது குடிக்க மாட்டோம் என உறுதிமொழி எடுத்த எல்.எல்.ஏ.க்கள்

மாலை மலர்  மாலை மலர்
பீகாரில் நாளை முதல் மதுவிலக்கு அமல்: நாங்கள் மது குடிக்க மாட்டோம் என உறுதிமொழி எடுத்த எல்.எல்.ஏ.க்கள்

பாட்னா, மார்ச் 31–

பீகாரில் கடந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்த போது ஐக்கிய ஜனதா தளம் மீண்டும் ஆட்சி அமைத்தால் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று நிதீஷ்குமார் வாக்குறுதி கொடுத்திருந்தார்.

ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி வெற்றி பெற்று நிதீஷ்குமார் முதல்–மந்திரி பொறுப்பை ஏற்றதும் ஏப்ரல் 1–ந்தேதி முதல் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி பீகார் மாநிலத்தில் நாளை (வெள்ளிக் கிழமை) முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இது தொடர்பான சட்ட திருத்தம் நேற்று பீகார் மாநில சட்டசபையில் கொண்டு வரப்பட்டது.

குரல் ஓட்டெடுப்பு மூலம் அந்த சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து பீகாரில் இனி யாரும் மது விற்பனை செய்யக்கூடாது என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதற்கிடையே நாளை முதல் மது குடிக்க மாட்டோம் என்று ஒவ்வொரு எம்.எல்.ஏ.வும் உறுதிமொழி ஏற்க வேண்டும் என்று சட்டசபையில் முதல்–அமைச்சர் நீதிஷ்குமார் கூறினார். இதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கைகளை உயர்த்தி ஒருமித்த குரலில், இனி நாங்கள் மது குடிக்க மாட்டோம் என்று உறுதிமொழி ஏற்றனர்.

பிறகு அது தொடர்பான ஒருதீர்மானம் கொண்டு வரப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. பீகாரில் பூரண மது விலக்கை கொண்டு வர கடும் தண்டனை சட்டங்களும் கொண்டு வரப்பட்டுள்ளது.

தடையை மீறி மது விற்பனை செய்பவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை தண்டனை அளிக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

மூலக்கதை