மணக்குடி பாலத்தில் காரில் கொண்டு வந்த ரூ.45½ லட்சம் பணம் பறிமுதல்

மாலை மலர்  மாலை மலர்
மணக்குடி பாலத்தில் காரில் கொண்டு வந்த ரூ.45½ லட்சம் பணம் பறிமுதல்

நாகர்கோவில், மார்ச். 31–

குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளிலும் தலா 3 பறக்கும் படை, தலா 3 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு பண பட்டுவாடாவை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பறக்கும் படை அதிகாரி இக்னேசியஸ் சேவியர் தலைமையிலான குழுவினர் நேற்றிரவு மணக்குடி பாலத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

காரின் பின்புறத்தில் இருந்த இரும்பு பெட்டியில் கட்டு கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக பறக்கும் படையினர் விசாரித்தபோது, ஏ.டி.எம். மையத்திற்கு பணத்தை வைப்பதற்காக கொண்டு வந்ததாக அவர்கள் தெரிவித்தனர். ஆனால் அதற்கான உரிய ஆவணங்கள் இல்லை.

இதையடுத்து அதிகாரிகள் காரில் இருந்த ரூ.45½ லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். இதை மாவட்ட வருவாய் அதிகாரியிடம் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்களை காட்டி பணத்தை பெற்றுச் செல்லுமாறு கூறினார்கள்.

குமரி மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக நடந்த வாகன சோதனையில் சுமார் ரூ.10 லட்சத்திற்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் ஒருசிலர் உரிய ஆவணங்களை காட்டி பணத்தை திரும்ப பெற்றுச் சென்று உள்ளனர். தற்போது ஒரே நேரத்தில் ரூ.45½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மூலக்கதை