மாணவியை கர்ப்பமாக்கிய வியாபாரிக்கு ஆயுள் தண்டனை: ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

மாலை மலர்  மாலை மலர்
மாணவியை கர்ப்பமாக்கிய வியாபாரிக்கு ஆயுள் தண்டனை: ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

ஈரோடு, மார்ச்.31-

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ஆலத்தூர் வாய்க்கால்புதூர் கிராமம் வி.ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (வயது 57). இவருடைய மனைவி பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். சுப்பிரமணியம் அவரது வீட்டிலேயே ஒரு மளிகைக்கடை நடத்தி வந்தார்.

கடையை தனியாக நடத்தி வந்த அவருக்கு அந்த பகுதியை சேர்ந்த ஒரு மாணவி உதவிகள் செய்து வந்தார். 17 வயது நிரம்பிய அந்த மாணவி அப்போது பிளஸ்-1 படித்து வந்தார். வறுமையான குடும்பத்தை சேர்ந்த அந்த மாணவி இரவு வரை கடையில் இருந்து சுப்பிரமணியத்துக்கு உதவிகள் செய்வது வழக்கம். இது சுப்பிரமணியத்துக்கு சபலத்தை ஏற்படுத்தியது.

அவர் கடந்த 13-9-2013 இரவு 9 மணிக்கு மாணவியிடம் தனது ஆசையை வெளிப்படுத்தினார். மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறினார். ஆனால் மாணவி இணங்காததால் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் இந்த விஷயத்தை வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டினார். பின்னர் கடந்த 16-10-2013 அன்று மீண்டும் மாணவியிடம் தகாத முறையில் நடக்க முயன்ற சுப்பிரமணியம், தனது ஆசைக்கு இணங்காவிட்டால் ஏற்கனவே என்னுடன் உல்லாசமாக இருந்த விஷயத்தை வெளியே சொல்லி விடுவதாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார்.

இந்தநிலையில் 15-12-2013 அன்று மாணவிக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது. அவரை பெற்றோர்கள் கோபியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, மாணவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் விசாரித்தபோது மாணவியின் கர்ப்பத்துக்கு காரணம் மளிகைகடைக்காரர் சுப்பிரமணியம் என்பது தெரியவந்தது. உடனடியாக அவர்கள் சுப்பிரமணியத்திடம் கேட்டபோது அவர் அவர்களையும் மிரட்டினார்.

அதைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சுப்பிரமணியத்தை கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் ஈரோடு மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி என்.திருநாவுக்கரசு நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில் குற்றம்சாட்டப்பட்ட மளிகை கடைக்காரர் சுப்பிரமணியத்துக்கு பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் அபராத தொகையை செலுத்த தவறினால் 2 ஆண்டுகள் கூடுதலாக ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் அந்த தீர்ப்பில் கூறி இருந்தார்.

இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் ஜி.டி.ஆர்.சுமதி ஆஜர் ஆனார்.

மூலக்கதை