அகமத்நகர் சிங்னாபூர் கோவிலுக்குள் பெண்களும் நுழைய அனுமதிக்கப்பட வேண்டும்: மும்பை ஐகோர்ட்டு உத்தரவு

மாலை மலர்  மாலை மலர்
அகமத்நகர் சிங்னாபூர் கோவிலுக்குள் பெண்களும் நுழைய அனுமதிக்கப்பட வேண்டும்: மும்பை ஐகோர்ட்டு உத்தரவு

மும்பை, மார்ச்.31-

அகமத்நகர் மாவட்டம் சிங்னாபூரில் புகழ்பெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது. பாரம்பரியமிக்க இந்த கோவிலுக்குள் நுழைய பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இந்த நிலையில் சமீபத்தில் பெண் ஒருவர் தடையை மீறி சனீஸ்வரர் கோவிலின் கருவறைக்குள் நுழைந்து பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் தடையை மீறி கோவிலுக்குள் நுழையும் போராட்டம் நடத்தி வரும் பெண்கள் அமைப்பினர் தடுத்து நிறுத்தப்பட்டு வருகிறார்கள்.

இந்த கோவிலுக்குள் பெண்கள் நுழைய தொடர்ந்து தடை நீடித்து வருகிறது.

இந்த நிலையில் சிங்னாபூர் கோவிலில் பெண்களுக்கு தடைவிதிக்கப்பட்டதை எதிர்த்து மூத்த வழக்கறிஞர் ஒருவர் மும்பை ஐகோர்ட்டில் பொதுநலன் மனுவை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் “ பெண்களுக்கு கோவில்களில் விதிக்கப்படும் தடை, சட்டவிரோதமானது மட்டுமல்ல அது குடிமகனின் அடிப்படை உரிமைக்கு எதிரான வன்முறை. அனைத்து பெண்களும் கோவில்களில் அனுமதிக்கப்பட வேண்டும். அதேபோல அவர்கள் கோவில் கருவறைக்குள் நுழையவும் அனுமதிக்கப்படவேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி வகேலா அடங்கிய அமர்வுக்கு முன் வந்தது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

எந்த ஒரு சட்டமும் பெண்கள் எந்த ஒரு இடத்திலும் நுழைய தடைவிதிக்கவில்லை. நீங்கள் ஆண்களை அனுமதித்தால் அங்கு பெண்களையும் அனுமதிக்கவேண்டும். ஒரு ஆண் சென்று தெய்வத்தின் முன் நின்று வணங்கமுடியும் என்றால், அங்கு பெண் ஏன் அனுமதிக்கப்படகூடாது? பெண்களின் உரிமைகளை பாதுகாப்பது என்பது மாநில அரசின் கடமையாகும்.

மராட்டிய இந்து வழிபாட்டு சட்டம் 1956-ன் படி, எந்த கோவில்களிலும் யார்வேண்டுமானாலும் நுழைய அனுமதி உள்ளது. தடுப்பவர்களுக்கு 6 மாதம் ஜெயில் தண்டனை விதிக்கவும் முடியும்.

இந்த சட்டத்தை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் அரசு விளம்பரப்படுத்த வேண்டும் மற்றும் சுற்றறிக்கையும் அனுப்பப்படவேண்டும்.

கோவிலுக்குள் பெண்கள் அனுமதிக்கப்படுவதால் புனிதத்தன்மை பாதிக்கப்படும் என்று அரசு கருதினால், அது பற்றி அரசு விளக்கம் அளிக்க வேண்டும். பெண்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்களா, இல்லையா என்பதை உறுதிப்படுத்துவது குறித்து அரசு தரப்பு வக்கீல் ஏப்ரல் 1-ந் தேதி (நாளை) விளக்கம் அளிக்கவேண்டும்.

இவ்வாறு நீதிபதி கூறினார்.

மூலக்கதை