கார், மோட்டார் சைக்கிள்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் உயர்வு

மாலை மலர்  மாலை மலர்
கார், மோட்டார் சைக்கிள்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் உயர்வு

புதுடெல்லி, மார்ச்.31-

கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் 40 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்திய சாலைகளில் இயக்கப்படும் அனைத்து வாகனங்களும் மூன்றாம் நபர் காப்பீடு செய்திருக்க வேண்டியது கட்டாயம் ஆகும். இந்த இன்சூரன்ஸ் கட்டணம், விபத்து இழப்பீடுகளின் எண்ணிக்கை, இழப்பு சதவீதம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆண்டுதோறும் இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணையத்தால் (ஐ.ஆர்.டி.ஏ.) மாற்றி அமைக்கப்படுகிறது.

அதன்படி 2016-17-ம் நிதியாண்டில் இன்சூரன்ஸ் கட்டணங்களை காப்பீடு நிறுவனங்கள் உயர்த்திக்கொள்வதற்கு ஐ.ஆர்.டி.ஏ. அனுமதி அளித்து உள்ளது. அதன்படி கார்கள், மோட்டார் சைக் கிள்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றன.

இந்த புதிய அறிவிப்பின்படி 1000 சி.சி. திறன் கொண்ட சிறிய வகை கார்களுக்கான காப்பீடு தொகை 40 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது. அதன்படி இந்த கார்களுக்கான இன்சூரன்ஸ் தொகை (தற்போது ரூ.1468) இனி ரூ.2055 ஆக உயரும்.

இதைப்போல 1000 மற்றும் 1500 சி.சி. திறன் கொண்ட ‘பி’ பிரிவு கார்களுக்கான காப்பீடும் 40 சதவீதம் உயர்த்தப்பட்டு ரூ.2,237 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதன் தற்போதைய பிரீமிய தொகை ரூ.1,598 ஆகும்.

எனினும் 1,500 சி.சி.க்கு அதிகமான திறன் கொண்ட செடான் வகை உயர்ரக கார்களுக்கு 25 சதவீதம் மட்டுமே உயர்த்தப்பட்டு உள்ளது.

இதைப்போல மோட்டார் சைக்கிள்களுக்கும் இன்சூரன்ஸ் தொகை உயர்த்தப்பட்டு உள்ளது. அதன்படி 75 சி.சி.க்கு கீழ் மற்றும் 75 முதல் 150 சி.சி. வரை திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களுக்கான காப்பீடு முறையே 9.6 சதவீதம் (ரூ.569) மற்றும் 15 சதவீதம் (ரூ.619) என உயர்த்தப்பட்டு உள்ளது.

150 சி.சி. முதல் 350 சி.சி. வரை திறன் கொண்ட பிரீமியம் வகை மோட்டார் சைக்கிள்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் 25 சதவீதம் உயர்கிறது.

ஆனால் 350 சி.சி.க்கு மேல் திறன் கொண்ட அதிநவீன மோட்டார் சைக்கிள்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் 10 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளது. இதைப்போல 7500 கிலோ வரையிலான பொருட்களை சுமந்து செல்லும் சரக்கு வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணமும் 10 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளது.

ஐ.ஆர்.டி.ஏ.வின் புதிய முறைப்படி ஆட்டோக்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் 3.2 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது. எனினும் மின்சாரத்தில் இயக்கப்படும் ஆட்டோக்களுக்கான கட்டணத்தில் மாற்றமில்லை.

மூலக்கதை