டி20 பெண்கள் உலகக் கோப்பை: இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா

மாலை மலர்  மாலை மலர்
டி20 பெண்கள் உலகக் கோப்பை: இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா

புதுடெல்லி, மார்ச் 30-

5-வது பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றன. லீக் முடிவில் ‘ஏ’ பிரிவில் முதல் இரு இடத்தை பிடித்த நியூசிலாந்து (8 புள்ளி), ஆஸ்திரேலியா (6 புள்ளி), ‘பி’ பிரிவில் முதல் இரு இடத்தை பெற்ற இங்கிலாந்து (8 புள்ளி), வெஸ்ட் இண்டீஸ் (6 புள்ளிகள்) ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

இந்த நிலையில் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நடப்பு தொடரில் தோல்வியை சந்திக்காத இங்கிலாந்து அணிகள் விளையாடின.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. ஆஸ்திரேலியா அணிக்காக பேட்டிங்கை தொடங்கிய அலிஸ்ஸா ஹீலியும்(25 ரன்கள்), இலிஸ் வில்லானியும்(19 ரன்கள்) நல்ல தொடக்கத்தை அளித்தார்கள். அதன் பிறகு களமிறங்கிய மெக் லானிங் அதிரடியாக விளையாடி ரன் குவித்தார். ஆனால் மறுமுனையில் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன.

20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் மெக் லானிங் 55 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக நடாலி ஸிவேர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

133 ரன்கள் எடுத்தால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறலாம் என்ற நிலையில் இங்கிலாந்து அணி களமிறங்கியது. கேப்டன் சார்லட் எட்வர்ட்ஸ் மற்றும் டாமி ஆகிய இருவரும் தொடக்க ஆட்டகாரர்களாக களமிறங்கினார்கள். சார்லட் அதிரடியாக ஆடி 29 பந்துகளில் 31 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். டாமி நிதானமாக ஆடி 40 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

அடுத்து நட்சத்திர வீராங்கனை சாரா டெய்லர் களமிறங்கினார். கடைசி 3 ஓவர்களில் 31 ரன்கள் எடுத்தால் வெற்றி நிலையில் சாரா டெய்லர் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனை அடுத்து களமிறங்கிய வீராங்கனைகள் வேகமாக ரன் குவிக்க முயன்று ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஆஸ்திரேலியா 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற்றது.

ஆட்டநாயகியாக 55 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா கேப்டன் மெக் லானிங் தேர்வு செய்யப்பட்டார். நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா நான்காவது முறையாக டி20 உலகக் கோப்பைக்கு தகுதிப் பெற்றுள்ளது.

மூலக்கதை