கோட்டைப்பட்டினம் அருகே நடுகடலில் மீனவர்களிடம் தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம்

மாலை மலர்  மாலை மலர்
கோட்டைப்பட்டினம் அருகே நடுகடலில் மீனவர்களிடம் தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம்

அறந்தாங்கி,மார்ச்,30–

கோட்டைப்பட்டினம் அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி, தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையிலான வருவாய்த்துறையினர் வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.

தமிழகத்தில் வரும் மேமாதம் 16–ந் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் அனைத்து வாக்களர்களும் தவறாமல் வாக்களிக்க வலியுறுத்தி தமிழக தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

இந்நிலையில் அறந்தாங்கி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், அறந்தாங்கி வருவாய் கோட்டாச்சியருமான ரம்யாதேவி தலைமையில், வருவாய்த்துறையினர் கோட்டைப்பட்டினத்தில் இருந்து கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு சொந்தமான படகில் கடலுக்குள் சென்றனர்.

பின்னர் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டு இருந்த விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்களிடம் வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தும் துண்டு பிரசுரங்களை வழங்கி, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். மேலும் படகில வாக்களிப்பதற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பலூன்களால் வோட் என வடிவமைத்து கட்டியிருந்தனர்.

வருவாய்த்துறையின் இந்த முயற்சியை கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் வெகுவாக பாராட்டியதுடன், நீங்கள் இவ்வளவு தூரம் வந்துள்ளீர்கள். அதனால் நாங்கள் கட்டாயம் வாக்களிப்போம் என உறுதி அளித்தனர். தேர்தல் நடத்தும் அலுவலருடன் உதவி தேர்தல் அலுவலர் சுரேஷ்கண்ணன், பழனிச்சாமி, கடலோர பாதுகாப்பு குழும சப்-இன்ஸ்பெக்டர்கள் மருது, ரகுபதி, வருவாய்த்துறையினர் உடன் இருந்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

மூலக்கதை