திருவள்ளூர் அருகே தாறுமாறாக ஓடிய லாரி மோதி 2 வாலிபர்கள் பலி

மாலை மலர்  மாலை மலர்
திருவள்ளூர் அருகே தாறுமாறாக ஓடிய லாரி மோதி 2 வாலிபர்கள் பலி

செவ்வாப்பேட்டை, மார்ச், 30–

திருவள்ளூர் அடுத்த அரண்வாயல் கிராமத்தில் பூந்தமல்லி – திருவள்ளூர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி ஒன்று திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

அப்போது பட்டரை கிராமத்தை சேர்ந்த சங்கர், பட்டரை பெருமந்தூரை சேர்ந்த கருணாகரன் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். தாறுமாறாக ஓடிய லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்தது.

இதில் படுகாயம் அடைந்த சங்கர், கருணாகரனை சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக இறந்தனர்.

இதுகுறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

மற்றொரு சம்பவம்...

ஊத்துக்கோட்டை அருகே பாலவாக்கம் அன்னை தெரசா நகரை சேர்ந்தவர் கருணாகரன். இவரது மகன் சுகுமார் (14), பாலவாக்கத்தை சேர்ந்த முருகன் மகன் குருமூர்த்தி (14) இருவரும் பாலவாக்கத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வந்தனர்.

நேற்று மாலை இருவரும் கிரிக்கெட் விளையாடி விட்டு சைக்கிளில் வீட்டிற்கு வந்தனர்.

பாலவாக்கம் – ஊத்துக்கோட்டை பிரதான சாலையில் சென்று கொண்டிருந்த போது ஊத்துக்கோட்டையில் இருந்து பெரிய பாளையம் நோக்கி வேகமாக சென்ற கார் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் மாணவர்கள் இருவரும் படுகாயம் அடைந்தனர்.

அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக சுகுமாரை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுகுமார் இறந்தார். குருமூர்த்தி சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து ஊத்துக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போந்தவாக்கம் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கமலநாதன். இவர் ஊத்துக்கோட்டை அரசு பஸ் டிப்போவில் மெக்கானிக்காக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

இவர் மோட்டார் சைக்கிளில் போந்தவாக்கம் கிராம எல்லையில் சென்று கொண்டிருந்த போது எதிரே இக்காடு கிராமத்தை சேர்ந்த தியாகு ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். கமலநாதனை போரூர் ராமச்சந்திரா ஆஸ்பத்திரியிலும், தியாகுவை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் சிகிச்சை பலனின்றி கமலநாதன் இறந்தார்.

மூலக்கதை