பொலிசாரிடம் சிக்காமல் தப்பியபோது நிகழ்ந்த பயங்கரம்: லொறியில் மோதி பலியான 3 வாலிபர்கள்

NEWSONEWS  NEWSONEWS
பொலிசாரிடம் சிக்காமல் தப்பியபோது நிகழ்ந்த பயங்கரம்: லொறியில் மோதி பலியான 3 வாலிபர்கள்

ஜேர்மனி நாட்டில் பொலிசார் துரத்தியபோது தப்பிக்க நினைத்து அதிவேகத்தில் காரை ஓட்டிச்சென்று லொறி மீது மோதிய விபத்தில் 3 வாலிபர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

தெற்கு ஜேர்மனியில் உள்ள Stuttgart என்ற நகரில் இன்று அதிகாலை 2 மணியளவில் மெர்சிடஸ் என்ற உயர் ரக காரில் 3 வாலிபர்கள் அதிவேகத்தில் சென்றுள்ளனர்.

அப்போது, சில மைல்கள் தூரத்தில் பொலிசாரின் சோதனை மையம் ஒன்று அமைந்துள்ளது. ஆனால், இதனை பார்த்த வாலிபர்கள் காரை நிறுத்தாமல் தடுப்புக்களை உடைத்துக்கொண்டு சென்றுள்ளனர்.

வாலிபர்களின் செயலால் சந்தேகம் அடைந்த பொலிசார் உடனடியாக அந்த காரை விரட்டிச் சென்றுள்ளனர்.

சில நிமிடங்களாக சினிமா பாணியில் இந்த துரத்தல் காட்சிகள் அரங்கேறியுள்ளது.

அப்போது, சாலையின் ஓரத்தில் கார்களை ஏற்றிச் செல்லும் நீளமான லொறி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இதனை கண நேரத்தில் கவனிக்காத கார் ஓட்டுனர் லொறி மீதி பயங்கரமாக மோதியதில் பல மீற்றர்கள் உருண்டுச் சென்றுள்ளது.

மணிக்கு சுமார் 100 கி.மீ வேகத்தில் கார் மோதியதில் கார் அப்பளம் போல் நொறுங்கி அதில் பயணித்த ஓட்டுனர் உட்பட 3 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.

மூவரின் சடலங்களையும் மீட்ட பொலிசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பொலிசாரை பார்த்து எதற்காக காரை நிறுத்தாமல் சென்றனர் என்ற கேள்விக்கு பதில் கிடைக்காததால், உயிரிழந்த வாலிபர்களின் தகவல்களை பொலிசார் சேகரித்து வருகின்றனர்.

மூலக்கதை