விண் நிலையம்; 340 நாளுக்கு பின்னர் பூமிக்குத் திரும்பிய அமெரிக்க – ரஷ்ய விண்வெளி வீரர்கள்!

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
விண் நிலையம்; 340 நாளுக்கு பின்னர் பூமிக்குத் திரும்பிய அமெரிக்க – ரஷ்ய விண்வெளி வீரர்கள்!

பைகோனூர், (கசகஸ்தான்), மார்ச் 2-

பூமிக்கு அப்பால், சுமார் 205 முதல் 270 மைல் வரையிலான உயரத்தில் வலம் வந்து கொண்டிருக்கும் அனைத்துலக விண்வெளி நிலையத்தில்  (ISS) வழக்கத்திற்கு மாறாக 340 நாள்கள் வரை தங்கியிருந்த பின்னர் விண்வெளி வீர்ர்கள் இன்று பூமிக்குத் திரும்பினர்.

அமெரிக்காவின் ஸ்கோட் கெல்லி, மற்றும் ரஷ்யாவின் மிக்காய்ல் கொர்னியென்கோ ஆகிய இருவரும் 340 நாள்கள் விண் நிலையத்தில் தங்கியிருந்தனர். இவர்களுடன் ரஷ்யாவின் மற்றொரு விண்வெளி வீர்ரான செர்ஜி வொல்கோவ் என்பவரும் பூமிக்குத் திரும்புள்ளார்.

அமெரிக்க வீர்ரான கெல்லி மற்றும் அவருடன் ஒரே பிரசவத்தில் பிறந்தவரான அவரது சகோதரர் மார்க் ஆகியவரையும் வைத்து அமெரிக்க விஞ்ஞானிகள் ஓர் ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர்.

இரட்டையர்களான இவர்கள் பூமியில் ஒருவர், விண்வெளியில் ஒருவர் என வெவ்வேறு சூழலில் இருக்கும் போது எவ்வாறு இவர்களின் செயல்பாடுகள் மற்றும் மனோநிலை அமைந்திருக்கிறது என்பதை விஞ்ஞானிகள் ஆராய்கின்றனர்.

சோயூஸ் விண்கலத்தின் வழி பூமிக்குத் திரும்பிய இவர்கள் வான்குடை மூலம் தரையிறங்கினர்.

உடனடியாக கெல்லியை அமெரிக்காவின் ஹுஸ்டன் நகருக்குக் கொண்டு செல்ல துரித ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அங்கு கெல்லியிடம் பல்வேறு மருத்துவ சோதனைகள் நடத்தப்படும் என்று நாசா அதிகாரிகள் கூறினர்.

கெல்லியின் இரட்டைச் சகோதரரான மார்க், ஒரு முன்னாள் விண்வெளிவீர்ர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

மூலக்கதை