உயர்நீதிமன்றத்தின் கண்டனம் பாராட்டு அல்ல: தமிழக அரசு திருந்த வேண்டும்: ராமதாஸ்

நக்கீரன்  நக்கீரன்

பதிவு செய்த நாள் : 28, ஜனவரி 2016 (14:30 IST)

மாற்றம் செய்த நாள் :28, ஜனவரி 2016 (14:30 IST)

உயர்நீதிமன்றத்தின் கண்டனம் பாராட்டு அல்ல: தமிழக அரசு திருந்த வேண்டும்: ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மாதம் மும்மாரி பொழிகிறதோ இல்லையோ, சென்னை உயர்நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு தமிழக அரசு ஆளாவது மட்டும் தவறாமல் நடந்து விடுகிறது. ஆனாலும், உயர்நீதிமன்றத்தின் கண்டனத்திற்காக வருத்தப்படாத தமிழக அரசு, மீண்டும், மீண்டும் நீதிமன்றங்களை அவமதிப்பதையே செய்து வருகிறது.

தமிழக அரசுத்துறைகளில் பதவி உயர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3% இட ஒதுக்கீடு வழங்க ஆணையிடக் கோரி சொக்கலிங்கம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வழக்குத் தொடர்ந்தார். ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் பதவி உயர்வு தொடர்பாகத் தான் இந்த வழக்குத் தொடரப்பட்டது என்பதால் இதற்கு பதில் மனு தாக்கல் செய்யும்படி பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித் துறை ஆகியவற்றுக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு ஆணையிட்டது. ஆனால், பல முறை அவகாசம் கொடுத்தும் இவ்வழக்கில் இரு துறைகளும் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது பதில்மனு தாக்கல் செய்யப்படாததால் தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள் 2 துறைகளுக்கும் தலா ரூ.10,000 அபராதம் விதித்தனர். அடுத்த முறை கண்டிப்பாக பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் ஆணையிட்டிருந்தனர். இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வின் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளிக்கல்வித்துறை சார்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், உயர்கல்வித்துறை சார்பில் பதில்மனு தாக்கல் செய்யப்படவில்லை. இதைக்கேட்டு கோபம் அடைந்த நீதிபதிகள் தமிழக அரசுக்கு கடும் கண்டனம் விதித்தனர். தமிழக உயர்கல்வித்துறைக்கு மீண்டும் ரூ.10,000 அபராதம் விதிப்பதாகவும் தலைமை நீதிபதி அறிவித்துள்ளார்.

மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதிலும், உயர்நீதிமன்றத்தின் ஆணைகளுக்கும்  தமிழக அரசு எந்தளவுக்கு மரியாதை அளிக்கிறது என்பதற்கு இது ஓர் உதாரணம். தமிழக அரசின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர்கள் வழக்குத் தொடரும் போது, அதில் அவர்கள் குறிப்பிட்டுள்ள குற்றச்சாற்றுகளுக்கு பதிலளிக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால், 6 மாதங்களுக்கு மேலாக  அதையே செய்யாமல் அரசு காலம் தாழ்த்துகிறது என்றால் அதைவிட முக்கியமான வேறு வேலை என்ன இருக்கிறது என்பது தெரியவில்லை. குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் பல்வேறு தடைகளைத் தாண்டி படித்து முடிக்கும் நிலையில் அவர்களுக்கு தகுதியான பணிகளை வழங்குவதும், பணிகளை பெற்றவர்களுக்கு உரிய காலத்தில் பதவி உயர்வு அளிப்பதும் அரசின் அடிப்படையான கடமையாகும். 

ஆனால், உரிமை கேட்டு போராடுகிறார்கள் என்பதற்காகவே முந்தைய அரசும், இப்போதும் அரசும் மாற்றுத்திறனாளிகளை எதிரிகளைப் போல கருதி பழி வாங்குகின்றன. 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்திய பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளை கைது செய்த காவல்துறை அவர்களை கிழக்குக் கடற்கரைச்சாலை உத்தண்டியில் உள்ள சுடுகாட்டில் இறக்கிவிட்டது. அடுத்த சில நாட்களுக்கு பிறகு போராடியவர்களை கைது செய்து மதுராந்தகத்தில் இறக்கிவிட்டது. நேற்று கூட வேலை கோரி தலைமைச்செயலகம் முன் போராட்டம் நடத்திய மாற்றுத்திறனாளிகளை கைது செய்து கொடுமைப்படுத்தியுள்ளது காவல்துறை. இவ்வாறாக மாற்றுத்திறனாளிகள் மீதான பழிவாங்கும் எண்ணம் காரணமாகவே அவர்கள் தொடர்ந்த வழக்கில் பதில் மனுதாக்கல் செய்யவில்லை.

ஏதேனும் ஒரு வழக்கில் அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தால் அதை மிகப் பெரிய அவமானமாக ஆட்சியாளர்கள் கருத வேண்டும். நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது என்பதற்காகவே  ஆட்சியாளர்கள் பதவி விலகிய நிகழ்வுகள் இந்தியாவில் நடந்துள்ளன. ஆனால், கீழ்நீதிமன்றங்கள் தொடங்கி உச்சநீதிமன்றம் வரை யார் கண்டனம் தெரிவித்தாலும் அதை துடைத்து எறிந்து விட்டு செல்வதை அ.தி.மு.க. அரசு வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 100 முறையாவது தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றமும், அதன் மதுரைக் கிளையும் கண்டனம் தெரிவித்துள்ளன. அதுமட்டுமின்றி பலமுறை அரசுக்கு அபராதமும் விதித்துள்ளன. 2014 ஆம் ஆண்டில் கிரானைட் ஊழல் விசாரணைக்காக அதிகாரி சகாயத்தை விடுவிக்காததற்காக ரூ.10,000 அபராதம் விதித்தது, நீதித்துறை சீர்திருத்தங்களை மேற்கொள்ளாதது தொடர்பான வழக்கில் ரூ.25,000 தண்டம் விதித்தது, கதர் கிராமத் தொழில் வாரிய ஊழியர்கள் 20 பேருக்கு ஊதியம் வழங்கப்படாத வழக்கில் ரூ.20,000 அபராதம் விதித்தது என அரசு பட்ட அவமானங்களை பட்டியலிட்டு கொண்டே செல்லலாம்.

ஆனால், இதற்காக தமிழக அரசு ஒருபோதும் கவலைப்படவில்லை. உயர்நீதிமன்ற உத்தரவுகளை மதிப்பதில்லை என்ற எண்ணத்துடனேயே செயல்படுகிறது. தமிழக அரசுக்கு எதிராக 21,000 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், இதில் தமிழகத்திற்கு தான் முதலிடம் என்றும்   உயர்நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். எனினும் அதை அரசு கண்டுகொள்ளவில்லை. ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றான நீதித்துறையை இன்னொரு தூணான அரசு நிர்வாகம்  மதிக்காமல் செயல்பட்டால் அது ஜனநாயகத்துக்கு பெரும் ஆபத்தாக முடியும். எனவே, ஜனநாயகத்தை காப்பதற்காக இனியாவது தமிழக அரசு திருந்தி நீதிமன்றங்களை மதித்து நடக்க முன்வர வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 

மூலக்கதை