மத்திய அரசு சார்பில் எந்த அமைப்பும் இல்லாததே மாணவிகளின் உயிர் பலிக்கு காரணம்!

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
மத்திய அரசு சார்பில் எந்த அமைப்பும் இல்லாததே மாணவிகளின் உயிர் பலிக்கு காரணம்!

இந்தியாவில், யோகா மற்றும் இயற்கை மருத்துவம் தொடர்பான படிப்புகள் தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், அதனை கண்காணிக்க மத்திய அரசு சார்பில் எந்த ஒரு அமைப்பும் இல்லாததே, 3 மாணவிகளின் உயிர் பலிக்கு காரணம் என கல்வியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே செயல்பட்டு வந்த எஸ்.வி.எஸ். கல்லூரியைப் போன்று, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் தொடர்பான படிப்புகளை நடத்தும் கல்லூரிகள், நாடு முழுவதும் புற்றீசல்கள் போல் பெருகி வருவதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். 

ஆனால், இதுபோன்ற கல்லூரிகளில் அடிப்படை வசதிகள் இருக்கிறதா? இங்கு பணியாற்றும் பேராசிரியர்கள் உரிய கல்வித் தகுதி பெற்றவர்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கண்காணிக்க மத்திய, மாநில அரசுகள் சார்பில் எந்த ஒரு அமைப்பும் இல்லாததே பல்வேறு தவறுகள் நடைபெறுவதற்கு காரணமாக அமைந்து விடுகிறது என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. 

இதுஒருபுறம் என்றால், யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்வியை வழங்கும் கல்லூரிகளை வரையறை செய்யும் நோக்கத்துடன் மத்திய அரசு சார்பில் நியமிக்கப்பட்ட குழுவினர், ஆயுஷ் அமைச்சகத்திடம் கடந்தாண்டு செப்டம்பரில் விரிவான அறிக்கையை சமர்ப்பித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதில், யோகா மற்றும் இயற்கை மருத்துவம் தொடர்பான இளங்கலை பட்டப்படிப்பை பயிற்றுவிக்கும் கல்லூரிகளை கண்காணிக்க தனி அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்ட போதிலும், அந்தக் கோரிக்கையை மத்திய அரசு இதுவரை ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. 

எனவே, இயற்கை மருத்துவம் மற்றும் யோகா கல்வியை பயிற்றுவிக்கும் கல்லூரிகளை நெறிப்படுத்தவும், இந்த துறையில் உள்ள போலி கல்வி நிறுவனங்களை ஒழிக்கவும் மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, மாணவர்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்த முடியும் என கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

மூலக்கதை