இனவாரி மாகாண எல்லைகளை வகுத்து ரஷ்ய பிரிவினைக்கு வழிகோலியவர் லெனின்; விளாடிமிர் புடின் குற்றச்சாட்டு!

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
இனவாரி மாகாண எல்லைகளை வகுத்து ரஷ்ய பிரிவினைக்கு வழிகோலியவர் லெனின்; விளாடிமிர் புடின் குற்றச்சாட்டு!

Wednesday, 27 January 2016 05:27

ஒருங்கிணைந்த ரஷ்யாவில் இனவாரி மாகாண எல்லைகளை வகுத்து பிரிவினைக்கு வழிகோலியவர் விளாடிமிர் லெனின் என்று அந்நாட்டின் தற்போதைய ஜனாதிபதி விளாடிமிர் புடின் குற்றஞ்சாட்டியுள்ளார். 

சோவியத் ஒன்றியம் உருவாகக் காரணமாக இருந்தவர் ரஷ்யாவின் முன்னாள் ஆட்சியாளர் லெனின். எனினும், அவரது கொள்கைகளில் மாற்றுக் கொண்டவரான தற்போதைய ஜனாதிபதி புடின், லெனின் கொள்கைகள் தொடர்பில் விமர்சிப்பதைக் கடந்த காலங்களில் தவிர்த்து வந்திருக்கின்றார்.

இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை ரஷ்யாவின் ஸ்டோவ்ரபோல் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய புடின், முன்னாள் ஆட்சியாளர்கள் லெனின், ஸ்டாலின் ஆகியோர் தொடர்பில் தன்னுடைய கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

அதில், “ரஷ்யாவின் கடைசி மன்னர், அவரது குடும்ப உறுப்பினர்கள், பணியாளர்கள், ஆயிரக்கணக்கான மத குருக்கள் ஆகியோரை லெனின் கொன்று குவித்தது மிகப் பெரிய தவறு.

இனவாரியாக மாகாண எல்லைகளை வரையறுத்தது அவர் செய்த மற்றொரு மிகப் பெரிய தவறாகும். அவ்வாறு செய்ததன்மூலம், ரஷ்ய ஒற்றுமைக்கு லெனின் வெடிகுண்டை வைத்துச் சென்றார்.

தனித்து செல்லும் உரிமையையும் கொடுத்து, அதே நேரம் முரட்டுத் தனமான அணுகுமுறையைப் பின்பற்றி சோவியத் ஒன்றிய நாடுகளை லெனின் இணைத்தார். இதன் காரணமாகவே சோவியத் ஒன்றியம் சிதறுண்டது.

அரசியல் எதிரிகளை ஒழித்துக் கட்டியது, ஆயிரக்கணக்கானவர்களை படுகொலை செய்தது போன்ற காரணங்களுக்காக சோவியத் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் ஸ்டாலின் குற்றவாளி. ஆனாலும், அவர், இரண்டாம் உலகப் போரில் வெற்றியைத் தேடித் தந்ததற்காக மதிக்கப்பட வேண்டியவர்.” என்றுள்ளார்.

மூலக்கதை