இராணுவத்தின் மீதான களங்கத்தைப் போக்க விசாரணைகள் அவசியம்: மைத்திரிபால சிறிசேன

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
இராணுவத்தின் மீதான களங்கத்தைப் போக்க விசாரணைகள் அவசியம்: மைத்திரிபால சிறிசேன

Tuesday, 26 January 2016 06:05

இலங்கை இராணுவத்தின் மீது சர்வதேச ரீதியில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களையும், களங்கத்தையும் போக்குவதற்காக விசாரணைகள் அவசியமாகியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

“இலங்கை பாதுகாப்புப் படையினருக்கு சர்வதேச ரீதியில் சட்டவிரோதமான படை என்ற தவறான பெயர் ஏற்படுவதிலிருந்து தவிர்த்துக்கொள்வதற்கும் சர்வதேச ரீதியில் பாதுகாப்புப் படையினர் மீதான குற்றச்சாட்டை விலக்கி, கௌரவமான படையினர் என்பதை வெளிப்படுத்துவதுமே எனது நோக்கம். 'எவ்வாறாயினும், சில சம்பவங்கள் மீதான இந்த விசாரணைகள் இராணுவத்தின் மீது தவறில்லை என்பதை நிரூபிப்பதற்கு மாத்திரமே” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பாதுகாப்பு படையினரின் குடும்ப அங்கத்தினருக்கு சலுகைகளை பெற்றுக்கொடுக்கம் விருசர சிறப்புரிமை அடையாள அட்டை வழங்குதல் மற்றும் அதற்காக உத்தியோகபூர்வ இணையத்தளத்தை அங்குரார்ப்பணம் செய்தல் நிகழ்வு, அலரி மாளிகையில் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது. அங்கு கருத்து வெளியிடும் போதே மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “பல தாசாப்தகால யுத்தத்திலிருந்து நாட்டை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் தியாகங்களை செய்த இராணுவத்தினருக்கு களங்கம் ஏற்பட நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். எந்த நிலையிலும் இராணுவத்தினரின் கௌரவத்தை பாதுகாத்து சர்வதேச ரீதியில் இலங்கை பாதுகாப்புப் படைகளை உயர்நிலைக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுப்போம்.

இன்று நாட்டிலே 'லே' (இரத்தம்) பற்றி புதிதாக பிரசாரத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த நாட்டில் உள்ள யாரானாலும் சரி, எந்த மாதமானாலும் சரி, எந்த இனமாக இருந்தாலும், என்ன மொழி பேசினாலும் சரி அவர்கள் அனைவரும் மனிதர் என்ற ரீதியில் ஒரே இரத்தத்தை உடையவர்கள். அதில் வேறுபாடு இல்லை. நாட்டு மக்கள் ஒவ்வொரும் தமது உரிமைகளைப் போல மற்றையவர்களது உரிமைகளையும் பாதுகாக்க முன்வரவேண்டும்.

தமிழ், சிங்கள, முஸ்லிம், பறங்கியல் என சகல மக்களுக்கும் இந்த நாட்டில் இன்னுமொரு யுத்தம் ஏற்படாமல் இருக்க பதில் சொல்ல வேண்டிய கடப்பாடு உண்டு. இணையத்தளங்கள் ஊடாக அரசாங்கத்துக்கு எதிராக சேறுபூசும் பிரசாரங்களை சிலர் முன்னெடுத்து வருகின்றனர். நானும் பிரதமரும் துண்டு துண்டாக உடைந்து போக வேண்டும் என்றும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இவ்வாறான சேற்றை வாரியிறைக்கும் மற்றும் மரண அச்சுறுத்தலுக்கு மத்தியிலேயே நாம் எமது கடமையை செய்ய வேண்டியுள்ளது.

மூன்று தசாப்த யுத்தத்தை வெற்றிகொண்ட பின்னர், தற்போது, இந்த நாட்டில் யுத்தம் ஏற்பட்டமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பிலும் இனி யுத்தம் ஏற்படாமல் தடுக்கத் தேவையான நடவடிக்கைகள் தொடர்பில் நாம் சிந்திக்க வேண்டும். யுத்தம் நிறைவடைந்த சர்வதேச நாடுகளும் இவ்வாறான செயற்பாடுகளையே முன்னெடுக்கின்றன.

யுத்த காலத்தில் விடுதலை புலிகளின் தாக்குதலுக்கு நான் முகங்கொடுத்துள்ளேன். ஐந்து முறை அவர்களின் தாக்குதலுக்கு இலக்கானேன். என்னை கொலை செய்ய முயன்ற நபருக்கு அண்மையில் பொது மன்னிப்பு வழங்கினேன். நாம், இராணுவத்தை கைது செய்து சிறையில் அடைக்கின்றோம், இராணுவ புலனாய்வாளர்களை கைதுசெய்து விசாரணைக்கு உட்படுத்துகின்றோம், தேசிய பாதுகாப்பை உடைக்கும் விதத்தில் செயற்படுகின்றோம், சர்வதேச நாடுகளுக்கு அடிபணிந்து அவர்களின் முகாமைத்துவத்தில் இராணுவத்தை புனரமைக்கின்றோம் என பல்வேறு குற்றச்சாட்டுகளை எம் மீது சிலர் முன்வைத்து வருகின்றனர். முப்படைகளின் தளபதி என்ற வகையில் உத்தியோகபூர்வமாக இந்தக் குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கின்றேன்.

நாடு என்ற ரீதியில் சர்வதேச நாடுகளை விட்டு தனித்து வாழ முடியாது. நாட்டு மக்கள் பாதுகாப்புடனும் மகிழ்ச்சியுடனும் வாழ வேண்டும். முன்னைய அரசாங்கத்தை விட சில முக்கிய பிரச்சினைகளுக்கு எமக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது. அதனை நீங்கிச் செல்ல முடியாது. அப்படிச் செய்தால் நாம் தனித்தே போவோம்.

ஐக்கிய நாடுகள் உட்பட சகல நாடுகளும் ஏற்றுக்கொண்ட படைகளாக எமது முப்படைகளையும் நாம் முன்னிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். யுத்தக் காலத்தில் இடம்பெற்ற சில சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்யுமாறு நாட்டுக்குள் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன. பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் சிவில் அமைப்புகள் இது தொடர்பில் நீண்ட காலமாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.

சர்வதேச ரீதியிலான விவகாரமாக இது மாறியுள்ளது. ஐக்கிய நாடுகள் உள்ளிட்ட அனைவருக்கும் நாம் பதில் சொல்லியாக வேண்டும். நான்கைந்து சம்பவங்கள் மீதான விசாரணை இராணுவ வீரர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படுபவை அல்ல. இது இராணுவத்தின் மீதான களங்கத்தை, அவர்கள் மீதான குற்றச்சாட்டை பொய் என்று உலகத்துக்குத் தெரியப்படுத்தி உலகளாவிய ரீதியில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட, களங்கமற்ற படையினராக இலங்கை பாதுகாப்புப் படையினரை முன்னேற்ற வேண்டும் என்பதே எம்முடைய எதிர்பார்ப்பு. இது தொடர்பில் யாரும் கலவரமடைய தேவையில்லை.” என்றுள்ளார்.

மூலக்கதை