​4வது ஒருநாள் போட்டி: இந்தியாவை 25 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
​4வது ஒருநாள் போட்டி: இந்தியாவை 25 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா

இந்தியாவிற்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் 25 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

கான்பெர்ரா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான வார்னர் 93 ரன்களும், ஃபின்ச் 107 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய மிட்செல் மார்ஷ் 33 ரன்களும், கேப்டன் ஸ்மித் 51 ரன்களும் எடுத்து வெளியேறினர். 

இதனைத் தொடர்ந்து விளையாடிய மேக்ஸ்வெல் 49 ரன்களும், பெய்லி 10 ரன்களும் எடுத்தனர். ஃபல்க்னர், வாடே, ஹேஸ்டிங்ஸ் ரன் ஏதும் எடுக்காமல், வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினர். இதனால் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு, ஆஸ்திரேலிய அணி 348 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி சார்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளும், இஷாந்த் சர்மா 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். 

349 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமால இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா, தவான் இணையில் ரோஹித் சர்மா 41 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தினார். 113 பந்துகளை எதிர்கொண்ட தவான் 14 பவுண்டரிகள், 2 சிக்சர் உள்பட 126 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சர்வதேச அரங்கில் தவான் அடிக்கும் 9வது சதம் இதுவாகும். 92 பந்துகளை எதிர்கொண்ட விராட் கோலி 11 பவுண்டரிகள், ஒரு சிக்சர் உள்பட 112 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சர்வதேச அரங்கில் 25வது சதத்தை பூர்த்தி செய்த கோலி இலங்கை வீரர் சங்கக்கராவின் சாதனையை சமன் செய்து அதிக சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் 4வது இடம் பிடித்தார். 

இவரை தொடர்ந்து வந்த கேப்டன் தோனி ரன் ஏதும் எடுக்காமல் வந்த வேகத்திலேயே வெளியேறி ஏமாற்றம் அளித்தார். தொடர்ந்து களமிறங்கிய குர்கிரீத் சிங், மற்றும் ரஹானே ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். 49.2 ஓவரில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 323 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், 25 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி 4-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை