தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண வேண்டும்: கவர்னர் உரை

நக்கீரன்  நக்கீரன்

பதிவு செய்த நாள் : 20, ஜனவரி 2016 (23:46 IST)

மாற்றம் செய்த நாள் :20, ஜனவரி 2016 (23:46 IST)

தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண வேண்டும்: கவர்னர் உரை

கவர்னர் உரையில் கூறப்பட்டு இருப்பதாவது:–

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரின் இறுதிக்கட்டத்தில் நடந்த போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைக்குக் காரணமானவர்களைப் பொறுப்பாக்காமல் நல்லிணக்கம் குறித்த சர்வதேசத் தீர்மானங்களையும், உணர்வுகளையும் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வரும் இலங்கை அரசின் போக்கினைக் கண்டு உலகெங்கிலும் உள்ள தமிழினம் வெகுண்டெழுந்துள்ளது.

இதைத் தணிக்கும் விதமாக, அன்றைய இலங்கை அரசு புரிந்த போர்க் குற்றங்கள், ஜெனிவா ஒப்பந்த விதிமீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டுமென ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையத்தில் தீர்மானத்தை நிறைவேற்றத் தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி, இந்த மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி இந்த அரசு எடுத்த தொடர் முயற்சி நினைவுகூறத்தக்கது.

இலங்கைத் தமிழர்கள் மீது இத்தகைய கடுங்குற்றங்களைப் புரிந்தவர்கள் உரிய நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்பட்டு நீதியை நிலை நாட்டிட வேண்டுமென்று இன்றைய இலங்கை அரசை மத்திய அரசு தொடர்ந்து வற்புறுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த மாமன்றத்தில் இது குறித்து நிறைவேற்றப்பட்ட பல்வேறு தீர்மானங்களை மத்திய அரசு கவனத்தில் எடுத்துக் கொண்டு, தமிழர்களுக்கு அவர்களின் நிலங்களைத் திரும்ப அளித்து அவர்கள் சம வாழ்வுரிமையுடன் கண்ணியமாகவும், அமைதியாகவும் வாழ ஒரு வாய்ப்பையும் ஏற்படுத்தித்தர வேண்டுமென இலங்கை அரசை வற்புறுத்த வேண்டும்.

பாக். நீரிணைப்புப் பகுதியின் பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களைத் தொடர்ந்து கைது செய்து, அவர்களின் படகுகளை சிறைபிடிக்கும் இலங்கைக் கடற்படையினரின் செயல்கள் கடும் கண்டனத்திற்குரிய வையாகும்.

இந்த மீனவர்கள் விடுதலையான பின்னரும் சிறை பிடிக்கப்பட்ட படகுகளை விட மறுக்கும் இலங்கையின் போக்கு, பாதிக்கப்பட்ட தமிழக மீனவர்களுக்கு முடிவில்லாத் துயரத்தை ஏற்படுத்தி வருகிறது.

எனவே, கச்சத்தீவை மீட்டு, நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை மீண்டும் நிலைநாட்டி இப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வைக் காண வேண்டியது நமது கடமையாகும்.

இப்பிரச்சினையின் முக்கியத்துவத்தினைக் கருத்தில் கொண்டு வெகு விரைவில் ஒரு இணக்கமான நிரந்தரத்தீர்வை எட்டிட மத்திய அரசும், இலங்கை அரசும் இணைந்து முயற்சி செய்யும் என நம்புகிறேன்.

ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்குவிப்பதற்காக சூரை மீன்பிடிப் படகுகளைப் பயன் படுத்துவதை ஊக்கு விக்க இந்த அரசு எடுத்து வரும் முயற்சிகளை நான் பாராட்டுகிறேன்.

பாக். நீரிணைப்புப் பகுதியில் மீன்பிடிப்பைக் குறைக்கவும், இதுவரை அதிகம் பயன்படுத்தப்படாத ஆழ்கடல் மீன்வள ஆதாரங்களைப் பயன்படுத்தும் வகையில் ஆழ்கடல் மீன்பிடித் திறனை விரிவு படுத்தவும், இந்த அரசால் கோரப்பட்டுள்ள, 1,520 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான ஆழ்கடல் மீன்பிடிப்பு மற்றும் அதற்குத் தேவைப்படும் கட்டமைப்பிற்கான மொத்த நிதியுதவியை விரைந்து அளிக்குமாறு மத்திய அரசை நான் வலியுறுத்துகிறேன்.

மூலக்கதை