விஜய் ஆண்டனியின் பாடல் சர்ச்சை

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
விஜய் ஆண்டனியின் பாடல் சர்ச்சை

விரைவில் விஜய் ஆண்டனியின் நடிப்பில் வெளியாகவிருக்கும் பிச்சைக்காரன் படத்தின் விளம்பரப்பாடலில் இடம்பெற்ற வரிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இசையமைப்பாளராக தமிழ்த்திரையுலகில் அறிமுகமாகி தற்போது கதாநாயகனாக உயர்ந்துள்ளவர் விஜய் ஆண்டனி. இவர், காதலில் விழுந்தேன் படத்தில் இசையமைத்த நாக்க மூக்க எனும் பாடல் இலக்கிய ஆர்வலர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை சினிமா ரசிகர்கள் மறந்திருக்க முடியாது.

இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு பாடலை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார் விஜய் ஆண்டனி. அவருடைய சொந்த நிறுவனம் தயாரிக்கும் பிச்சைக்காரன் எனும் படத்தில் கதாநாயகன் அவதாரம் எடுத்திருப்பதுடன், இசையும் அமைத்திருக்கிறார்.

அந்த படத்தின் பாடல்கள் சில நாட்களுக்கு முன் வெளியாகியது. அதில் கிளாமர் சாங் என்ற அடைமொழியுடன் வெளியான விளம்பரப்பாடல் தான் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

பாடலின் சில வரிகள் இட ஒதுக்கீடு குறித்தும், மருத்துவர்கள் மீதான நம்பிக்கை பற்றியும் மிகவும் தவறான பார்வையை முன் வைப்பதாக பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

சமூகத்தில் தவறான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய கருத்துக்கள், மிகப்பெரிய பொழுதுபோக்கு ஊடகமாக சினிமாவில், இடம்பெறுவதை தவிர்க்க வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது.

மூலக்கதை