இலங்கை தனது மனித உரிமை கடப்பாடுகளை நிறைவேற்ற வேண்டும்: மனித உரிமைகள் கண்காணிப்பகம்

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
இலங்கை தனது மனித உரிமை கடப்பாடுகளை நிறைவேற்ற வேண்டும்: மனித உரிமைகள் கண்காணிப்பகம்

Monday, 25 January 2016 15:57

இறுதி மோதலின் போது இடம்பெற்ற மனி உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக் கூறும் நடைமுறைகளில் சர்வதேச நீதிபதிகளும், வழக்கு தொடுநர்களும் குறிப்பிடத்தக்க பங்காற்றுவதை உறுதிசெய்வதன் மூலம், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் வழங்கிய வாக்குறுதிகளையும், தனது கடப்பாட்டையும் இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. 

கடந்த ஜனவரி 21ஆம் திகதி பி.பி.சிக்கு வழங்கிய செவ்வியொன்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, “வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பை ஏற்கப் போவதில்லை. உள்நாட்டுப் பிரச்சினையைத் தீர்க்க போதுமான வல்லுனர்கள், நிபுணர்கள் மற்றும் புத்திஜீவிகள் இலங்கைக்குள்ளேயே இருக்கின்றனர்.” என்று கூறியிருந்தார்.

நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்காக இலங்கை அரசாங்கம் சர்வதேச பங்களிப்பை கோரியது. எனவே, அதிலிருந்து தற்போது பின்வாங்க கூடாது என்று சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசியாவிற்கான இயக்குநர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.

சர்வதேச பங்களிப்பு குறித்து ஐக்கிய நாடுகளிற்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி நிச்சயமில்லாத ஒன்றல்ல. மாறாக பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களுக்கு அளிக்கப்பட்ட உறுதியான வாக்குறுதி என்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புரிந்துகொள்ள வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூலக்கதை