​அமெரிக்காவைத் தாக்கிய பனிப்புயல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
​அமெரிக்காவைத் தாக்கிய பனிப்புயல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

அமெரிக்காவின் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் பனிப்புயல் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் இரண்டு முதல் மூன்று அடி உயரத்துக்குப் பனி படர்ந்திருந்ததால், பல நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன.

அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி. உள்பட கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் கடும் பனிப்புயல் தாக்கும் என ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன.

பொதுமக்களும் தங்களுக்குத் தேவையான பொருட்களை முன்கூட்டியே வாங்கிவைத்துக்கொண்டு, வீட்டை விட்டு வெளியேறுவதைத் தவிர்த்து வந்தனர். இந்நிலையில், பனிப்பொழிவு அதிகரித்ததால், பல இடங்களில் சாலைகளில் 3 அடி உயரம் வரை பனி படர்ந்திருந்தது. வீடுகளின் மேற்கூரைகள் மற்றும் அனைத்துப் பகுதிகளிலும் பனி மூடியிருந்ததைக் காணமுடிந்தது. இதனால் பனிக்கட்டிகளை அகற்றும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பலவகையான இயந்திரங்கள் மூலம் சாலைகளில் படர்ந்துள்ள பனிக்கட்டிகளை உடைத்து அகற்றும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

பனிப்பொழிவு காரணமாக மக்கள் நடமாட்டம் இல்லாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. பல இடங்களில் பொதுமக்கள் விட்டுச் சென்ற கார்கள் முழுமையாகப் பனிமூடிய நிலையில் சாலைகளில் நின்றிருந்தன.

இதற்கிடையே, பிலடெல்பியாவில் 2 அடி உயரத்திற்குப் படர்ந்திருந்த பனியில் சிலர் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டனர். இதை ஏராளமான பொதுமக்கள் கண்டுரசித்தனர்.

பனிப்பொழிவின் அளவு படிப்படியாகக் குறையும் என தற்போதைய வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஓரிரு நாட்களில் இயல்பு நிலை திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை