3 விதமான கிரிக்கெட் போட்டிக்கும் கேப்டனாக கோலி தகுதியானவர்: பிரசன்னா

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL

மூன்று விதமான கிரிக்கெட் போட்டிக்கும் கேப்டனாக செயல்பட விராட் கோலி தகுதியானவர் என இந்திய முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் பிரசன்னா தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4 ஒருநாள் போட்டிகளிலும், தோனி தலைமையிலான இந்திய அணி அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து மோசமான நிலையில் உள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஏரப்பள்ளி பிரசன்னா, தோனி தலைமையில் இந்திய அணி தொடர்ந்து 3 தொடர்களில் தோல்வியை தழுவியுள்ளதால், விராட் கோலி-யை மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளுக்கும் கேப்டனாக நியமிக்கலாம் என்றும், அதற்கு அவர் தகுதியானவர் என்றும் பிரசன்னா சூசகமாக தெரிவித்துள்ளார்.

 தோனி பேட்ஸ்மேனாகவும், விக்கெட் கீப்பராகவும் செயல்படலாம் எனவும் அவர் ஆலோசனை கூறியுள்ளார். மார்ச் மாதம் களைகட்டவுள்ள 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

சமீபத்தில் தென்னாப்ரிக்க அணியிடம் தோனி தலைமையிலான இந்திய அணி ஒருநாள் மற்றும் 20 ஓவர் தொடரை இழந்தது. அதே சமயம் விராட் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை