இலங்கை அமைச்சரின் ஆணவத்துக்கு தக்க பாடம் புகட்டும் வகையில் போராட்டம் நடத்தப்படும்: வேல்முருகன்

நக்கீரன்  நக்கீரன்

பதிவு செய்த நாள் : 12, ஜனவரி 2016 (12:53 IST)

மாற்றம் செய்த நாள் :12, ஜனவரி 2016 (12:53 IST)

இலங்கை அமைச்சரின் ஆணவத்துக்கு தக்க பாடம் புகட்டும் வகையில் போராட்டத்தை த.வா.க. முன்னெடுக்கும்: வேல்முருகன்

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கையில் நடைபெற்ற மீனவர் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை திரும்ப ஒப்படைக்க முடியாது என்றும் தமிழக மீனவர்களுக்கு தக்க பாடம் புகட்டுவோம் என்றும் இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இலங்கை அமைச்சரின் இந்த கொலைவெறிப் பேச்சு மிகவும் வன்மையாக் கண்டிக்கத்தக்கது. தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில்தான் மீன்பிடிக்க செல்கின்றனர். ஆனால் இலங்கை அரசோ அத்துமீறி இந்திய கடற்பகுதிக்குள் நுழைந்து தமிழக மீனவர்களைக் கைது செய்வதும் அவர்களது படகுகளைப் பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது.

மத்தியில் பாரதிய ஜனதா அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகளாகும் நிலையில் தமிழக மீனவர் பிரச்சனைக்கு உருப்படியான எந்த ஒரு நிரந்தரத் தீர்வையும் காண்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. இது தொடர்பாக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களும் மத்திய அரசுக்கு தொடர்ந்து கடிதங்கள் மூலம் வலியுறுத்தி வருகிறார்.

ஆனால் ஆகக் குறைந்தபட்சம் இந்தியாவுக்கான இலங்கை தூதரை நேரில் அழைத்து மத்திய அரசு தமது கடும் கண்டனத்தைக் கூட தெரிவிக்க முன்வரவில்லை. மத்திய அரசின் இந்த பாராமுகத்தால்தான் இலங்கை அரசும் அதன் அமைச்சர்களும் திர்மித்தனமாக பேசுவதுடன் தமிழக மீனவர்களுக்கு பாடம் புகட்டுவோம் என கொலை மிரட்டலும் விடுக்கின்றனர்.

இலங்கை அமைச்சர் மகிந்த அமரவீரவின் இந்த பேச்சுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி கடும் கண்டனம் தெரிவிக்கிறது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் இலங்கை சிறையில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளையும் உடனே விடுவிக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

இலங்கையின் இந்த அட்டூழியத்துக்கும் இலங்கை அமைச்சரின் ஆணவத்துக்கும் தக்க பாடம் புகட்டும் வகையில் தமிழகத்தில் உள்ள இலங்கை தூதரகம் உள்ளிட்ட இலங்கை அரசு சார்ந்த அனைத்து நிறுவனங்களையும் முற்றுகையிட்டு அகற்றி வெளியேற்றும் போராட்டத்தையும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி முன்னெடுக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

மூலக்கதை