ஹிட்லரின் சுயசரிதையான ‘மெயின் காம்ப்- Mein Kampf’ மீண்டும் வெளியீடு; பரபர விற்பனை!

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
ஹிட்லரின் சுயசரிதையான ‘மெயின் காம்ப் Mein Kampf’ மீண்டும் வெளியீடு; பரபர விற்பனை!

Tuesday, 12 January 2016 06:18

ஜேர்மனியின் முன்னாள் ஆட்சியாளரும், சர்வாதிகாரி என்று உலகமே குறிப்பிடும் ஹிட்லரின் சுயசரிதையான ‘எனது போராட்டம்’ எனும் பொருள்படும் ‘மெயின் காம்ப்- Mein Kampf’ புத்தகம் மீண்டும் வெளியாகி பரபரப்பாக விற்பனையாகி வருகின்றது. 

1923ஆம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டு சிறையில் இருந்தபோது, ஹிட்லர் எழுதிய சுயசரிதை ‘மெயின் காம்ப்' ஆகும். யூதர்களுக்கும், கம்யூனிஸ்டுகளுக்கும் எதிரான தனது தேசிய இனவாதத் கொள்கையை அந்த நூலில் ஹிட்லர் வெளிப்படுத்தியிருந்தார்.

இனவெறி நாஜிக்களின் வேதமாகத் திகழ்ந்த அந்த நூல், இரண்டாம் உலகப் போரில் அவர்களது தோல்விக்குப் பின் ஜெர்மனியில் தடை செய்யப்பட்டது. போரின் முடிவில் ஹிட்லர் மரணமடைந்த பிறகு, அந்த சுயசரிதையின் பதிப்புரிமையை பவேரியா மாகாணம் பெற்றது.

இந்த நிலையில், நூலாசிரியரான ஹிட்லர் இறந்து 70 ஆண்டுகள் நிறைவடைந்ததால் அந்த பதிப்புரிமை காலாவதியானது. எனினும் ‘மெயின் காம்ப்'புக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீட்டிக்க பவேரிய அரசு மறுத்துவிட்டது. இதையடுத்து, மியூனிக் தற்கால வரலாற்றுக் கழகம் அந்த நூலை அச்சிட்டு, கடந்த வாரம் வெளியிட்டது.

ஹிட்லரின் கருத்துகளுக்கு இடையிடையே குறிப்புகளும், விமர்சனங்களும் இணைத்து பிரசுரமாகியுள்ள அந்த நூல் பரபரப்பாக விற்பனையாகி வருகிறது. 4,000 பிரதிகள் அச்சாகியுள்ள நிலையில், 15,000 பிரதிகளுக்காக முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

பெர்லின் நகரின் முக்கிய புத்தகக் கடையில், கண்காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த பிரதி உள்பட அனைத்துப் பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. தான் வாங்கிய ‘மெயின் காம்ப்' பிரதியை 10,000 யூரோக்களுக்கு விற்பனை செய்வதாக இணையதளத்தில் ஒருவர் அறிவித்துள்ளார். இந்த நிலையில், ஹிட்லரின் சுயசரிதைப் புத்தகம் வெளியாகியுள்ளதற்கு யூதர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 

மூலக்கதை