கட்டுமரம்–வலைகளுடன் ஜி.கே.வாசன் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

நக்கீரன்  நக்கீரன்
கட்டுமரம்–வலைகளுடன் ஜி.கே.வாசன் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

பதிவு செய்த நாள் : 18, ஜனவரி 2016 (22:59 IST)

மாற்றம் செய்த நாள் :18, ஜனவரி 2016 (22:59 IST)

கட்டுமரம்–வலைகளுடன் ஜி.கே.வாசன் ஆர்ப்பாட்டம் 


இலங்கை சிறையில் இருக்கும் தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் விசைப் படகுகளை விடுவிக்க வேண்டும். மீனவர்கள் மீன் பிடிக்க பாதுகாப்பு வழங்க வேண்டும். டீசல் மானியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி த.மா.கா. மீனவர் அணி சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் மீனவர்களின் கட்டுமரங்கள்– வலைகள் கொண்டு வரப்பட்டிருந்தன. த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வலைகளை தூக்கி பிடித்தபடி மீனவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்.

பின்னர் பேசிய ஜி.கே.வாசன், அண்டை நாடான இலங்கையின் செயலால் மீனவர்கள் அச்சத்தில் வாழ்கிறார்கள். இலங்கையின் இந்த போக்கை மத்திய–மாநில அரசுகள் கண்டிக்க வேண்டும். மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு மீனவர்கள் பிரச்சனை அதிகரித்திருக்கிறது. அதற்கு காரணம் மத்திய அரசின் மெத்தனப்போக்குதான். பறிமுதல் செய்யப்படும் தமிழக மீனவர்களின் படகுகளை விட மாட்டோம் என்று இலங்கை மந்திரி பொறுப்பற்ற முறையில் பேசி இருக்கிறார். அதை தட்டிக் கேட்கிற திறமையுடன் மத்திய அரசு செயல்பட வேண்டும். அனைத்து மீனவர்களுக்கும் 3000 லிட்டர் டீசல் மானிய விலையில் வழங்க வேண்டும். 

இவ்வாறு அவர் பேசினார்.

ராமேசுவரம், தங்கச்சி மடம் பகுதிகளை சேர்ந்த மீனவ பெண்கள் தங்களது இன்னல்களை விளக்கி பேசினார்கள். மீனவர் பகுதிகளை சேர்ந்த ஏராளமான மீனவ பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

படங்கள்: அசோக்

மூலக்கதை