30 வயதுக்குட்பட்ட இளம் சாதனையாளர்கள் பட்டியலில் 45 இந்தியர்கள்!

NEW INDIA NEWS  NEW INDIA NEWS
30 வயதுக்குட்பட்ட இளம் சாதனையாளர்கள் பட்டியலில் 45 இந்தியர்கள்!

போர்ப்ஸ் இதழ் 30 வயதுக்குட்பட்ட இளம் சாதனையாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

போர்ப்ஸ் இதழின் இந்த பட்டியலில், இந்தியாவை சேர்ந்தவர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் 45 பேர் இடம்பிடித்துள்ளனர்.

உலகை மாற்றியவர்கள் என 20 துறைகளைச் சேர்ந்தவர்களை, குறிப்பாக கல்வி, நுகர்வோர் தொழில்நுட்பம், உற்பத்தி, தொழில்துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் போர்ப்ஸ் இதழ் பட்டியலிடுகிறது.

நுகர்வோர் துறையில், ஓயோ ரூம்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், நிறுவனருமான ரித்தேஷ் அகர்வால் (22) இடம் பிடித்துள்ளார்.

இவர் இந்தியாவில் 100 நகரங்களில் 2,200 சிறிய ஹொட்டல்களை நிர்வகித்து வருவதற்காக இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

ககன் பியானி (28), நீரஜ் பெர்ரி (28), கரிஷ்மா ஷா (25) ஆகியோரும் இந்த துறையில் சாதனை படைத்து இப்பட்டியலில் இணைந்துள்ளனர்.

பொழுதுபோக்கு துறையில் லில்லி சிங் (27), வங்கித் துறையில் நீலாதாஸ் (27), முதலீட்டு ஆலோசனை துறையில் திவ்யா நெட்டிமி (29), விகாஸ் பட்டேல் (29), நீல் ராய் (29) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

துணிகர முதலீட்டுப் பிரிவில், இந்திய வம்சாவளியினரான விஷால் லுகானி (26), அமித் முகர்ஜி (27) ஆகியோர் உள்ளனர்.

ஊடக துறையில் இருந்து 27 வயதான நிஷா சிட்டால், ஆஷிஷ் பட்டேல் (29) ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

உற்பத்தி துறையில் சம்பிரிதி பட்டாச்சார்யா (28), சாகர் கோவில் (29) உள்ளனர்.

சமூக நிறுவனர்கள் துறையில் அனூப் ஜெயின் (28) சட்டம் மற்றும் கொள்கை துறையில் ஆஷிஷ் கும்பத் (26), திபயன் கோஷ் (27), அனிஷா சிங் (28) உள்ளனர். அறிவியல் துறையில் இருந்து சஞ்சம் கார்க் (29) இடம் பெற்றுள்ளார்.

தற்போது ஐந்தாவது ஆண்டாக போர்ப்ஸ் இதழ் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.

மூலக்கதை