மீனவர்கள் கைது: விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமருக்கு ஜெ. கடிதம்

நக்கீரன்  நக்கீரன்

பதிவு செய்த நாள் : 5, ஜனவரி 2016 (21:9 IST)

மாற்றம் செய்த நாள் :5, ஜனவரி 2016 (21:9 IST)

மீனவர்கள் கைது: விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமருக்கு ஜெ. கடிதம்

இலங்கை சிறைகளில் உள்ள 104 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். 

அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:- இந்திய மீனவர்கள் தங்கள் பாரம்பரிய கடல் பகுதியில் மீன்பிடிக்கும்போது இலங்கை கடற்படையினால் தொடர்ந்து கைது செய்யப்படுவது துரதிர்ஷ்டவசமானது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 20 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இத்துடன் சேர்த்து இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களின் எண்ணிக்கை 104 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் பலர் பல வாரங்களாக காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதனால், பண்டிகை காலத்தில் தங்கள் குடும்பத்தினருடன் அவர்கள் இருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 66 படகுகளும் விடுவிக்கப்படாமல் உள்ளன.

தமிழ்நாடு மீனவர்களின் உணர்வுப்பூர்வமான இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். அதேசமயம், தற்போது இலங்கை சிறைகளில் உள்ள 104 மீனவர்கள் மற்றும் அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட 66 படகுகளை உடனடியாக விடுவிக்க, நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

மூலக்கதை