தொழிலதிபர் விஜய் மல்லையா ஒரு மோசடிக்காரர்: பாரத ஸ்டேட் வங்கி அதிரடி அறிவிப்பு

NEW INDIA NEWS  NEW INDIA NEWS
தொழிலதிபர் விஜய் மல்லையா ஒரு மோசடிக்காரர்: பாரத ஸ்டேட் வங்கி அதிரடி அறிவிப்பு

தொழிலதிபர் விஜய் மல்லையா ஒரு மோசடிக்காரர் என பாரத ஸ்டேட் வங்கி தற்போது அறிவித்துள்ளது.

யு.பி. (யுனைடெட் ப்ரீவரீஸ்) குழுமத்தின் கீழ் கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ், கிங் ஃபிஷர் மதுபான ஆலை உள்ளிட்ட பல்வேறு தொழில்களை விஜய் மல்லையா நடத்தி வருகிறார்.

விஜய் மல்லையா நடத்தி வம் ’கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ்’ நிறுவனம் பின்னடைவைச் சந்தித்து வந்ததால், கடந்த 2010-ம் ஆண்டில் பாரத ஸ்டேட் வங்கி உள்பட 17 கடன்தாரர்களிடம் ரூ.6,900 கோடியை கிங் ஃபிஷர் நிறுவனம் கடனாகப் பெற்றுள்ளது.

ரூ.6,900 கோடி கடன் பெற்றும், தொடர்ச்சியான தொழில் நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறி கிங் ஃபிஷர் நிறுவனம் தனது விமானச் சேவைகளை கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து நிறுத்தி வைத்துள்ளது.

வங்கிகளிடம் பெற்ற கடனையும் அந்த நிறுவனம் திருப்பிச் செலுத்தவில்லை.

கடந்த செப்டம்பர் மாதம் யுனைடெட் வங்கி, “வேண்டுமென்றே பணத்தை திருப்பிச் செலுத்தத் தவறிய மோசடியாளர்கள்" என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது.

அந்த பட்டியலில் விஜய் மல்லையாவையும், கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் மற்றும் அதன் மூன்று இயக்குநர்களையும் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது பாரத ஸ்டேட் வங்கியும் “வேண்டுமென்றே பணத்தை திருப்பிச் செலுத்தத் தவறிய மோசடியாளர்கள்" என்ற பட்டியலில் விஜய் மல்லையாவை அறிவித்துள்ளது.

கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்காகப் பெறப்பட்ட ரூ.7,000 கோடி கடனை திருப்பிச் செலுத்தாததால் பாரத ஸ்டேட் வங்கி தற்போது இவ்வாறு அறிவித்துள்ளது.

வங்கியின் மூத்த அதிகாரிகள் கூறுகையில், விஜய் மல்லையா, அவரது கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம், அதன் தாய் நிறுவனமான யுனைடெட் ப்ரீவரீஸ் (யு.பி.) குழுமம் ஆகியவற்றை இந்த பட்டியலில் இணைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

யு.பி. குழுமத்தின் பங்குகளைக் கையகப்படுத்தி ஏலம் விட்டதன் மூலம் ரூ.1,100 கோடி கடன் தொகையை வங்கிகள் கடந்த 2013-ம் ஆண்டில் மீட்டெடுத்த நிலையில், அந்த நிறுவனத்துக்கு சொந்தமான அசையும், அசையா சொத்துகளை அடுத்த மாதம் ஏலம்விட திட்டமிட்டுள்ளன.

மூலக்கதை