முதலீட்டாளர்களுக்கு 7 லட்சம் கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்திய பங்குச் சந்தை வீழ்ச்சி

NEW INDIA NEWS  NEW INDIA NEWS

மும்பை பங்குச் சந்தை நேற்று வரலாறு காணாத பெரும் வீழ்ச்சியைச் சந்தித்ததால் முதலீட்டாளர்களுக்கு ரூ. 7 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் பங்குச் சந்தைகள் நேற்று பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தன. அதன் தொடக்கமாக சீனாவின் ஷாங்காய் பங்குச் சந்தையில் 8 சதவீத சரிவு ஏற்பட்டது.

மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் குறியீட்டில் 1,624 புள்ளிகள் வீழ்ச்சி ஏற்பட்டதன் மூலம் ஒரே நாளில் 5.9 சதவீத வீழ்ச்சியடைந்தது.

ஒரு கட்டத்தில் சென்செக்ஸில் 1,741 புள்ளிகள் வீழ்ச்சி காணப்பட்டது. இறுதியில் சென்செக்ஸ் 25,741 புள்ளிகளாக நிலைத்தது.

வர்த்தக முடிவில், பங்குச் சந்தையில் நிறுவனங்களின் மொத்த பங்கு மதிப்பு ரூ. 100 லட்சம் கோடி அளவுக்கும் கீழே குறைந்து, ரூ. 95,28,536 கோடியாக இருந்தது.

அன்னியச் செலாவணி சந்தையில், அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பில் பெரும் சரிவு ஏற்பட்டது.

சர்வதேச அளவில் சீனப் பொருளாதாரச் சரிவு ஏற்படுத்திய தாக்கம் அன்னியச் செலாவணிச் சந்தையில் எதிரொலித்தது.

ஆனால் இந்தச் சரிவு தாற்காலிகமானதுதான் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

அருண் ஜேட்லி கூறுகையில், சர்வதேச பங்குச் சந்தைகளில் கடந்த சில நாள்களாகவே மிகப் பெரிய அளவிலான ஏற்ற-இறக்கங்கள் காணப்பட்டன. அவை இந்தியப் பங்குச் சந்தைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டன.

இந்த நெருக்கடியான சூழல் தாற்காலிகமானதுதான் என்பதில் துளியும் சந்தேகமேயில்லை.

இந்தியப் பங்குச் சந்தை விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும். அதேவேளையில், சர்வதேச நெருக்கடிகளால் இந்தியப் பொருளாதாரம் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மூலக்கதை