மேகதாது அணையை கட்டும் எண்ணங்களை கர்நாடக அரசு கைவிட வேண்டும் - ஈ.ஆர்.ஈஸ்வரன்

  தினத்தந்தி
மேகதாது அணையை கட்டும் எண்ணங்களை கர்நாடக அரசு கைவிட வேண்டும்  ஈ.ஆர்.ஈஸ்வரன்

சென்னை, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- மேகதாதில் அணை கட்டாத நிலையில் தற்போதே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையத்தினுடைய அறிவுறுத்தலை ஏற்றுக் கொண்டு கொடுக்க வேண்டிய தண்ணீரை திறந்து விடுவதற்கு தொடர்ந்து கர்நாடக அரசு மறுத்து வருகிறது. மழைக்காலங்களில் கர்நாடகாவில் இருக்கின்ற அணைகள் எல்லாம் நிரம்பிய பின் அதற்கு மேல் தண்ணீரை தேக்கி வைக்க முடியாது என்கிற நிலையில் தான் தமிழ்நாடு தண்ணீரை பெற்று வருகிறது. மேகதாது அணை கட்டப்பட்டால் மழைக்கால தண்ணீரை மேலும் தேக்கி வைப்பதற்கு கர்நாடக மாநில அரசு ஒரு பெரிய வாய்ப்பை பெற்று விடும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்காமல் போய்விடும். சட்டத்தின்படி கட்டவே முடியாத அணைக்கு திட்ட அறிக்கையை கர்நாடக அரசு எதற்கு தயாரிக்க வேண்டும். அவ்வப்போது அரசியல் காரணங்களுக்காக கர்நாடகா மேகதாது அணை விவகாரத்தை கையில் எடுப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். ஒரே நாடு என்று சொல்லுகிற பாரதிய ஜனதா அரசு இதைப்பற்றி யோசித்து மேகதாதில் அணை கட்டுவதை தடுப்பதை விட்டு விட்டு அமைதியாக இருந்து தமிழ்நாட்டிற்கு துரோகம் விளைவிக்க முயற்சிக்கிறது. மேகதாதுவில் அணைக்கட்டும் முயற்சிகளை தடுப்பதற்கு தமிழ்நாடு அரசு என்ன முயற்சிகள் எடுத்தாலும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி அதற்கு துணையாக நிற்கும். கர்நாடகாவை போல தமிழ்நாட்டிலும் அனைத்து கட்சிகளும் ஓரணியில் நின்று கர்நாடக அரசின் முயற்சிகளை எதிர்க்க வேண்டும். தமிழக அரசு ஒரு அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டி நம்முடைய எதிர்ப்பை வலுவாக பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை