காலியாக உள்ள மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை

  தினத்தந்தி
காலியாக உள்ள மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை

சென்னை,எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் நூற்றுக்கணக்கான மருந்தாளுநர் பணியிடங்கள் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் மருந்துகள் பெறுவதில் காலதாமதம் ஏற்படுவதால், நோயாளிகள் அவதிக்குள்ளாவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆகவே, தற்போதைய மருந்தாளுநர் காலிப் பணியிடங்களை அவசரகால நியமனங்களாக அறிவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுப்பதோடு, அந்நியமனங்களை நீண்டகால பதிவு மூப்பு பட்டய (D.Pharm) படிப்பு படித்த மருந்தாளுனர்களை கொண்டும் நிரப்பிட நடவடிக்கை எடுத்திட வேண்டும். மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் (MRB) நடத்தும் தேர்வுகளில் தற்போது பத்தாம் வகுப்பு + பட்டய மருந்தாளுநர் (D.Pharm) தகுதி புறக்கணிக்கப்பட்டுள்ளதால், முறையான கல்வி பயின்றும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பதிவுமூப்பு அடிப்படையில் பணி நியமனம் கோரி போராடி வரும் இப்பிரிவினர் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். இவர்களுக்கு பதிவுமூப்பு இருந்தும், கூடுதல் கல்வித் தகுதியை அடிப்படையாகக் கொண்டு பணி நியமனம் நடத்தப்பட்டு அவர்களின் சமூக உரிமை பறிக்கப்பட்டுள்ளது. ஆகவே, தமிழக அரசு பட்டய (D.Pharm) மருந்தாளுனர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், இன்னும் 5-6 ஆண்டுகளே பணிக்காலம் மீதமுள்ள இவர்களின் நீண்டகாலக் கோரிக்கையைத் தமிழக அரசு கருணை கூர்ந்து பரிசீலித்து, காலியாக உள்ள மருந்தாளுநர் பணியிடங்களுக்கு பதிவுமூப்பு அடிப்படையில் நியமனம் செய்து நிறைவேற்றிட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது,

மூலக்கதை