பழைய ஓய்வூதியத் திட்டம்: தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க ஐகோர்ட்டு அறிவுறுத்தல்

  தினத்தந்தி
பழைய ஓய்வூதியத் திட்டம்: தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க ஐகோர்ட்டு அறிவுறுத்தல்

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரெடெரிக் ஏங்கெல்ஸ், ஐகோர்ட்டு மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- கடந்த 1.4.2003 அன்று முதல் தமிழ்நாடு அரசு பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தி அரசாணை வெளியிடப்பட்டது. இந்த புதிய ஓய்வூதியத் திட்டத்துக்காக விதிமுறைகள் ஏதும் இல்லை. இதற்கிடையே மத்திய அரசு 2013-ம் ஆண்டில் ஓய்வூதிய நிதி ஒழுங்குபடுத்துதல் ஆணையத்தை ஏற்படுத்தி பல்வேறு வழிகாட்டுதலைகளை தெரிவித்து உள்ளது. இந்த வழிகாட்டுதல்களையும் இப்போது வரை தமிழ்நாடு அரசு பின்பற்றவில்லை. இதுதொடர்பாக அமைக்கப்பட்ட வல்லுனர் குழு அறிக்கையை பின்பற்றி அரசாணைகளோ, விதிமுறைகளோ ஏற்படுத்தவில்லை. இதனால் ஓய்வூதிய பலன்களை பெறமுடியாமல் பலர் அவதிப்படுகின்றனர். எனவே புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை குறித்து அரசின் நிலைப்பாட்டை மனுதாரரிடம் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். இந்த வழக்கின் விசாரணையை வருகிற 19-ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

மூலக்கதை